சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.
இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பப்பட்டது தெரியவந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.