ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான் அண்மையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள திமுக கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அண்ணாச்சி தயவில் தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
ஆனால், “அண்ணாச்சி கொடுக்கச் சொன்ன பணம் ஒன்றியத்துக்கு மட்டும் தான் வந்தது, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர நிர்வாகிகளுக்கு அவர் கொடுக்கச் சொன்ன பணத்தை சேர்மன் இன்னும் கொடுக்கல” என்று புலம்பித் தீர்க்கிறார்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக நிர்வாகிகள்.
2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ள திமுக தலைமை, கடந்த முறை திமுக கூட்டணி தோற்றுப் போன தொகுதிகளில் இம்முறை கூடுதல் கவனம் செலுத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் கடந்த முறை அதிமுக வென்ற ஒரே ஒரு தொகுதியான ஸ்ரீவில்லிபுத்தூரை இம்முறை வென்றெடுக்க அதிக முனைப்பு காட்டி வருகிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் அண்ணாச்சி.
அதன் முதல்படியாக, தொகுதிக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகளை உற்சாகப்படுத்த அண்மையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி அசத்தினார். ஆனால், இந்த கவனிப்பானது தங்களுக்கு வரவில்லை என ஆதங்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர திமுக நிர்வாகிகள், ‘பணமும் வரல… வேலையும் ஒழுங்கா நடக்கல’ என தலைமைக்கு தகவலை தட்டிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய நகர திமுக நிர்வாகிகள் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சிலர், “2021 தேர்தலில் வில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் தோற்றாலும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் வில்லிபுத்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது. மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ரவிகண்ணன் சேர்மனானார். அவரை வைத்து ஏதாவது காரியம் சாதித்துக் கொள்ளலாம் என்று பார்த்தால் அது நடக்கவில்லை.
திமுக-வினருக்கு காண்ட்ராக்ட்டுகளை வழங்காமல் அதிமுக ஆட்சியில் யாரெல்லாம் காண்ட்ராக்ட் எடுத்து கல்லாகாட்டினார்களோ அவர்களுக்கே வேலைகளை ஒதுக்கிக் கொடுத்தார் ரவிகண்ணன். இப்போது வரை அதுதான் நிலைமை. வருமானம் வரக்கூடிய அனைத்திலும் அதிமுக ஆட்சியில் பலனடைந்தவர்களே பலனடைகிறார்கள். அதிமுக வென்றது 4 வார்டுகள் தான். அந்த வார்டுகளில் தான் அதிகமான பணிகள் நடக்கின்றன. மொத்தத்தில் 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படி இருந்தோமோ அப்படியே தான் இப்போதும் நாங்கள் இருக்கிறோம். திமுக கவுன்சிலர்களையும் நிர்வாகிகளையும் சேர்மனே மதிப்பதில்லை என்பதால் அதிகாரிகளும் மதிப்பதில்லை.
இந்த நிலையில், ஒன்றியத்தில் திமுக நிர்வாகிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்கிய அண்ணாச்சி, நகர நிர்வாகிகளுக்கு அந்தத் தொகையை வழங்கும் பொறுப்பை சேர்மன் ரவிகண்ணனிடம் ஒப்படைத்திருந்தார். ஆனால், அவர் அதை வழங்க மறுத்துவிட்டார். இதை நிர்வாகிகள் அண்ணாச்சியின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போது, ‘விரைவில் உங்களுக்கும் வரவேண்டியது வந்து சேரும்’ என்று சொல்லி எங்களை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
மேலும், பென்னிங்டன் மார்க்கெட் பிரச்சினை, பேருந்து நிலைய வணிக வளாகத்தை இடிக்கும் விவகாரம் உள்ளிட்ட விஷயங்களில் நகராட்சி நிர்வாகம் செயல்பட்ட விதமும், சேர்மனின் சாதிய ரீதியிலான செயல்பாடுகளும் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கி இருக்கிறது. ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் உறுப்பினர் சேர்க்கைக்காக கட்சி நிர்வாகிகள் வீடு வீடாகச் செல்லும் போது குடிநீர், கழிவு நீர் கால்வாய், சுகாதார பிரச்சினை என திமுக-வினரே எங்களிடம் புகார் சொல்வதால் எங்களால் பதில் சொல்லமுடியவில்லை. இதனாலேயே வில்லிபுத்தூர் டவுனில் திமுக-வுக்கு வாக்கு சதவீதம் குறைந்துவிடுமோ என அச்சப்படுகிறோம்.
எங்களின் அச்சத்தை மாவட்டச் செயலாளர் அண்ணாச்சிக்கும் முதல்வரின் கவனத்துக்கும் புகாராக கொண்டு சென்றுள்ளோம். நாங்களே பிரச்சினையைக் கிளப்பினால் கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் என்பதால் கட்சி தலைமை இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்” என்றனர். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக வில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிகண்ணனிடம் கேட்டதற்கு, “கட்சி நிர்வாகிகளுக்கு பணம் வழங்குவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மற்றபடி கட்சி தொடர்பான விவகாரங்களை மாவட்டத் தலைமையிடம் தான் கேட்க வேண்டும்” என சிம்பிளாக முடித்துக் கொண்டார்.
மற்ற மாநகராட்சி, நகராட்சிகளில் திமுக மேயர்களுக்கும் சேர்மன்களுக்கும் எதிராக திமுக-வினரே போர்க்கொடி தூக்கி வருவது போல் வில்லிபுத்தூரிலும் பூகம்பம் வெடிப்பதற்கு முன்பாக திமுக தலைமை சுதாரித்துக் கொண்டால் நல்லது!