‘கட்சியின் பெயர், சின்னம் எல்லாம் எங்களுக்குத்தான், கட்சியின் நிர்வாகிகள் 90 சதவீதம் பேர் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என மிகவும் தெம்பாக பேச ஆரம்பித்திருக்கிறது அன்புமணி தரப்பு. அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறது ராமதாஸ் தரப்பு?
பாமகவில் தினமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. தந்தை – மகன் இடையே தகிக்கும் அனலால் பாமக தினமும் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது. அதில் இன்றையச் செய்தி, பாமக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்த ஜி.கே.மணியை அந்தப் பதவியிருந்து நீக்கிவிட்டு, வெங்கடேஸ்வரனை நியமித்திருக்கிறது அன்புமணி தரப்பு.
ஜி.கே.மணி 1997 முதல் 2022 வரை பாமகவில் தலைவராக இருந்தவர், கட்சியின் பல்வேறு ஏற்ற இறங்கங்களிலும் தளராது பயணித்தவர். இதனால்தான், அன்புமணியே கூட பல முறை அவரை ‘தியாகச் செம்மல்’ என்று அழைத்திருக்கிறார். அப்படிப்பட்ட தியாகச் செம்மலையே பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது அன்புமணி தரப்பு. மேலும், ராமதாஸ் பக்கம் இருக்கும் மற்றொரு எம்எல்ஏவான அருளை, கட்சிலிருந்து நீக்குவதாகவும் உறுதியாக சொல்லியுள்ளது அன்புமணி டீம்.
அருள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில் 4 பேர் மட்டுமே இப்போது கட்சியில் உள்ளனர் என்றும், அதில் 3 பேர் தங்கள் பக்கம் உள்ளனர் எனவும் தெரிவித்து, அவர்களை சட்டப்பேரவை குழு தலைவர், துணைத் தலைவர், கொறடா பதவிகளில் நியமித்துள்ளது அன்புமணி தரப்பு. ஒருவேளை இதனை சபாநாயகர் அங்கீகரித்தால் சட்டப்பேரவையில் அன்புமணி தரப்பே அதிகாரப்பூர்வ கட்சியாக கருதப்படும்.
அதேபோல, பாமக கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தங்களுக்கே தேர்தல் ஆணையம் தந்துள்ளதாக அன்புமணி தரப்பு சொல்வது உறுதியானால், அது ராமதாஸ் தரப்புக்கு பெரும் பின்னடைவாக மாறும். இந்த விவகாரத்தில் ராமதாஸ் தரப்பும் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில், ராமதாஸ் தான் கட்சியின் நிறுவனர், எனவே கட்சி தங்களுக்கே சொந்தம் என்ற ரீதியில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் டெல்லி லாபி உள்ளவர்கள் பக்கமே சாதகமாக உத்தரவுகள் வந்துள்ளதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம்.
முக்கியமாக, சரத்பவார்தான் தேசியவாத காங்கிரஸின் நிறுவனர். ஆனால், எம்எல்ஏ, எம்.பிக்கள் பெரும்பான்மை, நிர்வாகிகள் ஆதரவு, டெல்லி லாபி துணையோடு அவரின் அண்ணன் மகன் அஜித் பவாருக்கு கட்சி சொந்தமானது. சரத்பவார் புதிய கட்சி, சின்னத்துக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இங்கே நினைவுகூரத்தக்கது.
சட்டப் போராட்டம் மூலமாக பாமக தங்களுக்கே கிடைக்கும் என ராமதாஸ் தரப்பு ஆழமாக நம்புகிறது. ஆனாலும், அன்புமணியின் தற்போதைய ரூட்டின்படி அவர் பெரும்பாலும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இடம்பெறுவார். அப்படியானால் டெல்லியின் ஆதரவு அவருக்கே கிடைக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில்தான், தனது தொடக்கப் புள்ளியான வன்னியர் சங்க அரசியலை மீண்டும் கையில் எடுக்க ஆரம்பித்துள்ளார் ராமதாஸ். ஒருவேளை தேர்தல் ஆணையம் பாமகவை அன்புமணிக்கு ஒதுக்கினால், வன்னியர் சங்க அடையாளத்துடன் புதிய பெயரோடு அரசியலில் களம் இறங்கவும் ராமதாஸ் தரப்பு தயாராகி விட்டதாக சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
இதன் வெளிப்பாடாகவே, டிசம்பரில் மிக பிரமாண்டமாக வன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார் ராமதாஸ். இந்தப் போராட்டத்தில் அதிகளவிலான இளைஞர்களை திரட்டி தனது பலத்தை காண்பிக்கவும் ராமதாஸ் சபதம் எடுத்துள்ளார். ஒருவேளை இந்தப் போராட்டங்கள் வட மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினால், அது அன்புமணி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியமாக மாறும்.
இப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு மோதிக்கொள்ளும் வேகத்தை பார்த்தால், இருவருக்குள் இந்த தேர்தலுக்குள் சமாதானம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். ஒருவேளை இருவரும் இரு வேறு கட்சிகள், இரு வேறு சின்னங்களில் போட்டியிட்டால் வட மாவட்டங்களில் அனல் பறக்கும்.
இரு கட்சிகள் என ஆன பின்னர், இருவரும் ஒரே அணியில் இருக்கவும் வாய்ப்பில்லை. அன்புமணி தரப்பு அதிமுக – பாஜக கூட்டணியில் இடம்பெறுவது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. அப்படியானால், ராமதாஸ் தரப்பு திமுக அல்லது வேறு அணியில் இணையும். இந்த இரு அணிகளும் தேர்தலில் ஏற்படுத்தும் தாக்கத்தை பொறுத்தே, பாமகவின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும்.
‘ஒரு கை பார்த்துவிடுகிறேன்’ என்ற சவாலோடு எதற்கும் தயாராகவே இருக்கிறார் ராமதாஸ். அவரது பேட்டிகள் அதையே சொல்கின்றன. மறுபக்கம் அன்புமணியும் அனைத்தையும் எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார். பார்ப்போம் இந்த மோதலில் யாரின் கை ஓங்க போகிறதென்று?