யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக கூட்டணியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவருக்காகவே ஸ்பெஷலாக வேலூருக்கு வந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. அந்தளவுக்கு மோடியிடமும் அமித் ஷாவிடவும் தனிப்பட்ட செல்வாக்கு பெற்றவர்.
எம்ஜிஆர் இருந்தபோது 1980-ல் ஆரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன ஏ.சி.சண்முகம் தொடர்ந்து, 1984-ல் வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்பி ஆனார். அத்துடன் அவரது வெற்றிக் கணக்கு நின்றுவிட்டது. 2001-ல் ஆரணியில் போட்டியிட்டு தோற்றவர், 2014-ல் வேலூர் மக்களவை தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு தோற்றுப் போனார்.
2019-ல் மீண்டும் வேலூரில் இரட்டை இலையில் போட்டியிட்ட போதும் ஏசிஎஸ்ஸால் ஜெயிக்க முடியவில்லை. இதையடுத்து, 2024-ல் வேலூரில் மீண்டும் தாமரையில் போட்டியிட்டும் மலராமல் போனார். இந்த நிலையில், 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் சட்டமன்றத் தேர்தல் களத்துக்கு வருகிறார் சண்முகம். அதற்குக் காரணம், தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்தால் அமித் ஷா தயவில் அமைச்சராகலாம் என்ற தொலைநோக்குத் திட்டம் என்கிறார்கள்.
அண்மையில் வேலூர் மாவட்டத்துக்கு இபிஎஸ் பிரச்சாரப் பயணம் வந்தபோது வேலூர், காட்பாடி, ஆற்காடு தொகுதிகளுக்கான கூட்டங்களில் அவருடன் ஏ.சி.சண்முகமும் பங்கேற்றார். இதுகுறித்து, புதிய நீதிக்கட்சி நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, “2026 தேர்தலில் வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், ஆற்காடு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தொகுதி என 5 தொகுதிகளை அதிமுக-விடம் கேட்டுப் பெறும் திட்டத்தில் இருக்கிறார் ஏசிஎஸ். ஐந்து கிடைக்காமல் போனாலும் நிச்சயம் இரண்டு தொகுதிகளில் இம்முறை போட்டியிட வேண்டும் என்பது அவரது திட்டம். அந்த இரண்டில் ஒன்று ஆரணி அல்லது வேலூராக இருக்கும்” என்றனர்.
இதுகுறித்து பேசிய வேலூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளோ, “ஆற்காடு பிரச்சாரத்தின் போது இபிஎஸ் தங்கியிருந்த தனியார் ஓட்டலில் ஏ.சி.சண்முகமும் இபிஎஸ்ஸும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஏசிஎஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு, ‘இந்த முறை வேலூர் தொகுதியில நீங்களே நில்லுங்கண்ணே’ன்னு இபிஎஸ் சொல்லி இருக்கிறார். அதை ஆமோதிக்கும் வகையில் தலையாட்டிய ஏசிஎஸ், ‘அமித் ஷாவிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.
பாஜக தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி அமைந்தால் ஏசிஎஸ் வெறுமனே எம்எல்ஏ-வாக போய் உட்கார விரும்பமாட்டார். தன்னை அமைச்சராக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார். அதனால் தான் அமித் ஷாவிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறி இருக்கிறார்” என்றவர்கள், “அப்படியே அவர் போட்டியிட்டாலும் வேலூர் தொகுதி என்றால் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
அதில்லாமல், ஏற்கெனவே வென்ற ஆரணியை அவர் கேட்டால் சிக்கல் இருக்கிறது. ஏனென்றால், தொடர்ந்து மூன்று தேர்தல்களாக தொகுதியை தக்கவைத்து வரும் ஆரணி அதிமுக-வில் முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலபேர் போட்டியிட வரிசைகட்டி நிற்கிறார்கள்” என்றனர்.
ஏசிஎஸ் போடும் கணக்கு குறித்து புதிய நீதிக் கட்சியின் வேலூர் மாநகர் மாவட்டச் செயலாளர் ஜி.பி.கே.பாலாஜியிடம் கேட்டதற்கு,
“எது எப்படி இருந்தாலும் எங்கள் தலைவர் இரண்டு தொகுதிகளை நிச்சயம் பெறுவார். அதில் யார் போட்டியிடுவார்கள் என்பதை அவர் முடிவு செய்வார். எதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முடிவை டிசம்பரில் சொல்கிறோம்” என்றார்.
தேர்தல் என்று வந்துவிட்டால் ‘பொன் முட்டையிடும் வாத்தாக’ வலம் வரும் ஏ.சி.சண்முகம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் போதெல்லாம், “அண்ணே ஜெயிச்சா மத்திய அமைச்சராக்கும்” என்று அவரது விசுவாசிகள் ஆர்ப்பரிப்பார்கள். இம்முறை அண்ணனின் மாநில அமைச்சர் கனவாவது கைகூடி வருகிறதா என்று பார்க்கலாம்!