சிவகங்கை: அஜித்குமார் மரணத்துக்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமாரின் கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி நீர்த்து போகவைக்க முயற்சி நடந்தது. நாங்கள் போராட்டம் நடத்தியதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்துக்கு நேரில் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அஜித்குமாரின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அஜித்குமார் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் ஓர் உயிர் பறிபோயுள்ளது. இந்த விவகாரத்தில் நான் கண்டன அறிக்கை வெளியிட்டு, அதிமுக போராடிய பின்னரே காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இப்போது சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
காவலர்கள்தான் இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தினார்களா என்பதில் சந்தேகம் உள்ளது. மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் காரணமாகவே கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. அஜித்குமார் உடற்கூறு ஆய்வில் 44 இடங்களில் காயம் இருந்ததாக தெரியவந்துள்ளது. எனவே அஜித்குமார் மரணத்திற்கு திமுக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அஜித்குமார் குடும்பத்துக்கு அதிமுக துணை நிற்கும்.
அஜித்குமாரின் கொலை வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி நீர்த்து போகவைக்க முயற்சி நடந்தது. நாங்கள் போராட்டம் நடத்தியதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது கொலை, கொள்ளை, திருட்டு நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் இன்றைய கொலை நிலவரம் என்ன என செய்தி வெளியிடும் அளவுக்குத்தான் நிலை உள்ளது என்றார். திமுக ஆட்சி நடக்கும்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடுகிறது. தமிழகத்தில் 20 ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கிறது.
அஜித்குமார் குடும்பத்துக்கு 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளோம். அதிமுக ஆட்சி அமைந்த பின்னர், அஜித்குமாரின் சகோதரருக்கு விரும்பிய இடத்தில் அரசுப்பணி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்