மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், அரசு மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 5 பேரிடமும் மதுரையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு ஜூன் 27-ம் தேதி தரிசனத்துக்காக நிகிதா என்ற பெண் சென்றுள்ளார். அப்போது அவரது நகை காணாமல் போனது குறித்த புகாரில் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கென தனிப்படை போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்கள் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, டெல்லி சிபிஐ பிரிவு டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். சம்பவ இடம், திருப்புவனம் காவல் நிலையம், கோயில் என பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
தொடர்ந்து காவலாளியுடன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அஜித்குமாரின் நண்பர்கள் பிரவின்குமார், வினோத்குமார், அவரது தம்பி நவீன் குமார், தனிப்படை வாகன ஓட்டுநரான காவலர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேரிடமும் மதுரை ஆத்திகுளம் சாலையிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து கடந்த 18-ம் தேதி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இவர்களை மடப்புரம், அப்பகுதியில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றும் விசாரித்து சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களை திரட்டினர்.
இந்நிலையில், கோயில் ஊழியர் பிரவீன்குமார், அஜித்குமாரின் நண்பர்கள் வினோத்குமார், அருண்குமார், தம்பி நவீன்குமார் ஆகிய 4 பேரிடமும் 2-வது முறையாக மதுரை சிபிஐ அலுவலகத்தில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை சில ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
அஜித்குமார் தாக்கப்பட்ட நிலையில், அவரை தனிப்படையினர் ஜூன் 28-ம் தேதி மாலை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். அப்போது பணியில் இருந்து அரசு மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, மருத்துவ உதவியாளர்கள் அழகர், அமுதா மற்றும் தனியார் மருத்துவர் ஒருவர் மற்றும் கோயில் அலுவலர்கள் கண்ணன், கார்த்திக் ஆகியோருக்கு மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது.
இதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் அவர்கள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் சில மணி நேரம் விசாரித்தனர். அதிகாரிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன. மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராகவேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை அனுப்பியதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.