மதுரை: மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக சாட்சிகளிடம் அதிகாரிகள் விசாரித்தனர். காலை முதல் மாலை வரையிலும் இந்த விசாரணை நீடித்தது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27-ம் தேதி திருப்புவனம் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். 28-ம் தேதி காவல் நிலையத்தில் இருந்து தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு டெல்லியைச் சேர்ந்த சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரிக்கின்றனர். அஜித்குமாருடன் விசாரணைக்கென அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல், அவரது நண்பர்கள் பிரவின்குமார், வினோத்குமார் , அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் மற்றும் தனிப்படை வாகன ஓட்டுநர் ராமச்சந்திரன் ஆகிய 5 பேரிடமும் மதுரை ஆத்திகுளம் ரோட்டிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் கடந்த 18-ம் தேதி விசாரணை நடத்தினர்.
ராமச்சந்திரனிடம் மட்டும் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. மேலும், இவர்களை வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்து சில ஆதாரங்களை சேகரித்துள்ளனர்.
இந்நிலையில், அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகளின் 9-வது நாள் விசாரணையின் ஒரு பகுதியாக பிரவீன்குமார் (கோயில் ஊழியர்), வினோத்குமார் (அஜித்குமார் நண்பர்), அருண்குமார் (காரை பார்க் செய்த ஆட்டோ ஓட்டுநர்), நவீன் குமார் (அஜித்குமார் தம்பி ) ஆகிய 4 பேருக்கு மீண்டும் சம்மன் அளிக்கப்பட்ட நிலையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் இன்று காலை 2-வது முறையாக ஆஜராகினர். இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியே விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவம் குறித்து அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்தனர். மாலை வரையிலும் விசாரணை நீடித்தது.
மேலும், மதுரை சிபிஐ அலுவலகத்தில் 4 பேர் அளிக்கும் சாட்சியம், தகவல் குறித்தும், திருப்புவனம் காவல் நிலையத்திலுள்ள ஆவணங்கள் அடிப்படையிலும் இரு குழுக்களாக பிரிந்து (CROSS CHECK) என்ற முறையில் தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக விசாரிப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கின்றனர்.