திருப்புவனம்: கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி மற்றும் சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸார், காவல் ஆய்வாளர், சிவகங்கை ஏடிஎஸ்பி உள்ளிட்டோரிடம் மதுரை மாவட்ட நீதிபதி நேற்று விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாக இருந்தவர் அஜித்குமார் (27). நகை திருட்டு புகார் தொடர்பாக இவரை விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி விசாரணையை நடத்தி வருகிறார். முதல் 3 நாட்கள் நடந்த விசாரணையின்போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோயில் அலுவலர் பெரியசாமி, போலீஸார் அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர் நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித்குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித்குமாரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
நான்காவது நாளான நேற்று காலை நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு சென்று 40 நிமிடங்கள் விசாரணை நடத்தினார். அஜித்குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார்.
தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியிலிருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடம் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தீவிர விசாரணை நடத்தினார். இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.