சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவத்தை அறிந்தவர் நேரில் சாட்சியளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூலை 2-ம் தேதியில் இருந்து திருப்புவனம் காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர். தொடர்ந்து அவர் அஜித்குமார் தாயார், சகோதரர், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 4) திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார். இதனிடையே சம்பவத்தை அறிந்தோர் மாவட்ட நீதிபதியிடம் அனுமதி பெற்று நேரில் ஆஜராகி சாட்சியளிக்கலாம் என அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் தெரிவித்தார்.