சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 4-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார்.
முன்னதாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீஸாரிடம் அரை மணி நேரம் விசாரித்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார்.
கொலையும், விசாரணையும்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் (29) போலீஸார் தாக்கியதில் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஜூலை 2-ம் தேதியில் இருந்து திருப்புவனம் காவல்நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி, மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.
அவரிடம் ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோர் வழக்கு தொடர்பான ஆவணங்களை அளித்தனர்.
தொடர்ந்து நீதிபதி அஜித்குமார் தாயார், சகோதரர், உறவினர்கள், போலீஸார், கோயில் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர், அறநிலையத்துறை அதிகாரி உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில் இன்றும் (ஜூலை 5) திருப்புவனம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார்.
முன்னதாக நேற்று விசாரணைக்கு ஆஜரான திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் “ஜூன் 28 மாலை 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் போலீஸார் கொண்டு வந்தனர். நான் பரிசோதித்தபோது அஜித்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. அதை நான் போலீஸாரிடம் தெரிவித்தேன். உடலை பிரேதப் பரிசோதனை அறையில் வைக்கச் சொன்னேன். ஆனால், உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் உடலை எடுத்துச் சென்றனர்.” என மாவட்ட நீதிபதியிடம் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.