மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண் அளித்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் 5 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இறந்த அஜித் குமாரின் தாயார் உட்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் போது அஜித்குமார் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசே உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ விசாரணையை முடித்து ஆக.20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி சிபிஐ விசாரணை நடத்தி ஆக.20-ல் ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் தனிப்படை வேன் ஓட்டுனர் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததற்காக சிபிஐக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் அஜித்குமார் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் கட்ட குற்றப் பத்திரிகையை நீதிபதி திருப்பி அனுப்பினார். அதில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அந்த குறைபாடுகளை சரிசெய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மதுரை தலைமை குற்றவியல் நீதிபதி செல்வபாண்டி முன் நேற்று மீண்டும் வந்தது. அப்போது சிறையில் உள்ள 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட டிரைவர் ராமச்சந்திரனும் நீதிபதி முன் ஆஜரானார். சிபிஐ தரப்பில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தனிப்படை காவலர்கள் 6 பேருக்கும் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டது. பின்னர் 6 பேருக்கும் குற்றப் பத்திரிகையை படித்து பார்க்க அவகாசம் வழங்கி அடுத்த விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.