திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரித்தால் தாமதம் ஏற்படும். எனவே, நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணையே போதுமானது என்று அஜித்குமார் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் (27), நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையின்போது உயிரிழந்தார். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், அஜித்குமாரின் குடும்ப வழக்கறிஞர் கணேஷ்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்த வழக்கில் தகவல் தெரிந்தவர்கள் யாராக இருந்தாலும், பயப்படாமல் வந்து நீதிபதியிடம் சாட்சியம் அளிக்கலாம். ஜூலை 6-ம் தேதி வரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த உள்ளார். கொலை வழக்கில் 6-வது குற்றவாளியான போலீஸ் வேன் ஓட்டுநரையும் கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம்.
அஜித்குமாரை தாக்கிய தனிப்படை போலீஸார் 6 பேர், ஆய்வாளர், டிஎஸ்பி, எஸ்.பி. புகார் தெரிவித்த நிகிதா ஆகிய 10 பேர் ஜூன் 27 முதல் 30-ம் தேதி வரை யார் யாருடன் செல்போனில் பேசியுள்ளனர் என்ற விவரங்களைக் கேட்டுள்ளோம். இந்த விவரங்கள் மூலம் உண்மை வெளிச்சத்துக்கு வரும். பொதுவாக சிபிஐ விசாரிக்கும் வழக்குகளில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, சிபிசிஐடி போலீஸார் 30, 40 நாட்களுக்குள் விரைந்து விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தாமதமின்றி நீதிவழங்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும். எனவே, சிபிஐ விசாரணை தேவையில்லை. நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.