திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலையில் தலைமைச் செயலகத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த அதிகாரி பெயரை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் தாக்குதலில் கொலையான அஜித்குமார் குடும்பத்தினரை இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் ஏற்கெனவே 23 லாக்-அப் மரணங்கள் நடந்துள்ளது. அஜித்குமாரோடு 24-வது லாக்-அப் மரணம் நிகழ்ந்துள்ளது.
யாரோ புகார் அளித்ததன்படி எப்ஐஆர் போடாமல் கோயில் காவலாளி அஜித்குமாரை முதலில் ஸ்டேஷனில் வைத்து அடித்துள்ளனர். உடன் பிறந்த சகோதரர் காவல் நிலையம் சென்று கேட்டபின் விடுவித்தனர். அதன்பின்பு சிறப்பு காவல் படையினர் 2 நாட்கள் வைத்து அஜித்குமாரை அடித்துள்ளனர். எப்ஐஆர் போடாமல் தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் அதிகாரி சொன்னார் என்பதற்காக சிறப்புக் காவல் படையினர் 6 பேர் சேர்ந்து அடித்துள்ளனர்.
3 இடங்களில் சிகரெட் வைத்து சுட்டுள்ளனர். அடித்ததில் மண்டை உடைந்துள்ளது. கல்லீரல், இருதயம், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. 23 இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்தளவுக்கு அடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? அதற்கு மேலதிகாரியின் அழுத்தம்தான் காரணம். கொலை நடந்ததை உடனடியாக வெளிக்கொண்டு வந்தது பாஜகதான்.
அரசு வேலை என்பது கண்துடைப்பு. 80 கி.மீ தள்ளி காரைக்குடியில் வேலை கொடுத்துள்ளனர். 4 கி.மீ தள்ளி வீட்டுமனைப் பட்டா கொடுத்துள்ளனர். இதனை முதல்வர் கண்டுகொள்ளவில்லை. இதைவிட பெரிய தவறை தமிழக முதல்வர் செய்துள்ளார். தலைமைச் செயலகத்திலிருந்து யார் அடிக்கச் சொன்னார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லவில்லை. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே இருதயம் பாதித்ததாகவும், உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்.
போலீஸார் தாக்கும் வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது உயிருக்கு பாதுகாப்பில்லை. தமிழகத்தில் தனி மனிதர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதே மாவட்டத்தில் பள்ளிக்கு சென்ற 7 வயது சிறுவன் உடலில் காயங்களுடன் மரணமடைகிறான். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. இதற்கு பொதுமக்கள்தான் தக்க தீர்ப்பு வழங்க வேண்டும். இந்து சமய அறநிலையத் துறை அதிகாரியை விசாரிக்க வேண்டும். கொலையை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தலைமைச் செயலகத்திலிருந்து அழுத்தம் கொடுத்தவர் பெயர் வெளியிட வேண்டும். அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். சாத்தான்குளம் வழக்கு 5 ஆண்டாக நிலுவையில் உள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் கொடுமை செய்த ஞானசேகரன் வழக்கை 5 மாதத்தில் முடித்துள்ளனர். அந்த பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை, நல்ல நீதிபதி விசாரணை எங்களுக்குத் தேவை.
சிங்கம்புணரியில் 7 வயது பள்ளி மாணவன் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துள்ளார். தமிழகத்தில் அன்றாடம் நிகழும் இதுபோன்ற நிகழ்வுகள் வேதனையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாலியல் வன்கொடுமைகள் தடுக்க வேண்டும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்” என்றார்.