சென்னை: “திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக உறுப்பினர் சேர்க்கைக்கான ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இன்று முதல் 45 நாட்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பு நடைபெறவுள்ளது. நாளை ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாடு முழுவதும், ஜூலை 3ம் தேதி முதல், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், திமுகவினர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் மண், மொழி,மானம் காக்க மக்களை ஒன்றுதிரட்டுவதே இந்த ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தின் நோக்கம். தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதற்காகவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது,” என்றார்.
அப்போது மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “திருப்புவனம் கோயில் காவலர் உயிரிழந்த விவகாரத்தில் தகவல் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுத்துவிட்டோம். கைது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இன்றுகூட மேலதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.