சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவந்தது. காவல் துறையினரின் அத்துமீறல் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேதப் பரிசோதனை குறித்து மதுரை அரசு மருத்துவமனை வட்டாரம் கூறியது: ‘அஜித்குமார் பிரேத பரிசோதனை 5 மணி நேரம் நீடித்தது. அது முழுமையாக வீடியோ எடுக்கப்பட்டது. அஜித்குமார் உடலில் வடது கை மூட்டுக்கு மேலே காயம், வலது கை மணிக்கட்டுக்கு கீழே சிராய்ப்பு காயம், வலது பக்க நெற்றியில் சிராய்ப்பு காயம், வலது பக்க கன்னத்தில் சிராய்ப்பு காயம், இடது பக்க காதில் ரத்தம் உறைந்த நிலையிலும் வடிந்த நிலையிலும் உள்ளது.
இடது புஜத்தில் சிராய்ப்பு காயம், இடது பக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயம், இடது பக்க கை மூட்டில் சிராய்ப்பு காயம் நான்கு உள்ளன. இடது கை மணிக்கட்டுக்கு மேல் பகுதியில் மூன்று சிராய்ப்பு காயங்கள், இடது பக்க விலாவில் கன்றிய காயம், இடது கரண்டை காலில் சில சிராய்ப்பு காயம், கை விரல்கள் உட்புறமாக மடங்கி விரைப்பாக காணப்பட்டது.
இடது பக்க முதுகில் விலா பின்புறம் கன்றிய காயம், இடது பக்க இடுப்பில் சிராய்ப்பு காயம், வலது பக்க பின் முதுகில் சிராய்ப்பு காயம், இயற்கை உபாதை கழிந்த நிலையில் இருந்தது. இடது கால், இடது மணிக்கட்டுக்கு மேல் தோல் பிரிந்த காயம், இடது கால் பாதத்துக்கு மேல் சிராய்ப்பு காயம், வலது பக்க காதில் உள்பக்கமாக ரத்தம் உறைந்த நிலையில் காணப்பட்டது என மொத்தம் 18 இடங்களில் காயங்கள் உள்ளன.
உள்ளுறுப்புகள் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில்தான் மரணத்துக்கான தெளிவான காரணம் தெரியவரும். கண்ணில் ஏதேனும் தூவப்பட்டதாக என்பதை அறிய கண் தசை பகுதிகள் கண் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எலும்பு முறிவு ஏற்பட்டதா என்பது குறித்து பரிசோதிக்கப்பட்டு வருகிறோம். முழுமையாக அனைத்து முடிவுகளும் வந்த பின்னர்தான் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கை தயாரிக்கப்படும்’ என்று அவர்கள் கூறினர்.
வீடியோவில் அம்பலமான அத்துமீறல்: இதனிடையே, காவலாளி அஜித்குமார் மீது போலீஸார் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளதும், அவர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதும் வீடியோ ஒன்றின் மூலம் அம்பலமாகியுள்ளது.
அஜித்குமார் மரணம் குறித்து திருப்புவனம் போலீஸார் பிஎன்எஸ்எஸ் 190 (2) (ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நீதித் துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டது. தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார். மேலும், இச்சம்பவம் குறித்து திருப்புவனம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் விசாரணை நடத்தினார்.
பின்னர், இந்த வழக்கு பிஎன்எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து, தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட இவர்கள் 5 பேரையும் 15 நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நடுவர் வெங்கடேஷ் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
அஜித்குமார் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
இதனிடையே, தனிப்படை போலீஸார் கோயில் மாட்டு தொழுவத்தில் வைத்து அஜித்குமாரை கம்பால் கொலைவெறி தாக்குதல் நடத்தி, அத்துமீறலில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தனிப்படையினர் சுற்றி நின்று கொண்டு கம்பால் அடுத்தடுத்து அஜித்குமாரை தாக்கினர். இந்த வீடியோவை அங்குள்ள ஒருவர் ஜன்னல் வழியாக தனது செல்போனில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி: அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கு இன்று (ஜூலை 1) மீண்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். அஜித்குமாரை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை? அவரை விசாரணைக்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல யார் அதிகாரம் கொடுத்தது? சிவகங்கை மாவட்ட எஸ்பி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்?
புலனாய்வு செய்வதற்குதான், காவல்துறை சிசிடிவி பதிவை மறைக்க விரும்புகிறீர்களா? ஏன் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கிறீர்கள்? அடிப்பதற்கு காவல் துறை எதற்கு? முழு உண்மையையும் காவல் துறை சொல்ல மறுக்கிறீர்கள்? யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது என டிஜிபி பதிலளிக்க வேண்டும். அஜித்குமாரின் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும். இல்லையெனில் மாவட்ட நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இதுதான் வலிப்பில் அவர் இறந்ததற்கு காரணமா?!
#JusticeForAjithkumar
pic.twitter.com/mlmTAyxVCg
— VOICE OF TVK (@VoiceOfTVK_) July 1, 2025