தேர்தல் வரப்போகிறது என்றாலே அரசுப் பணியின் அந்திம காலத்தில் இருக்கும் பலரும் ஆர்வமாய் அரசியல் களத்துக்கு வருவார்கள். விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு, தாங்கள் விரும்பும் கட்சியில் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கேட்பார்கள். சிலருக்கு லக் அடிக்கும்; பலருக்கு பக் என்றாகிவிடும். பரமக்குடி பாலு இதில் இரண்டாவது ரகம்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தனி தொகுதிக்குள் வரும் போகலூர் ஒன்றியம் முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனைவர் எஸ்.பாலு. தென்காசியில் மாவட்டப் பதிவாளராக இருந்த பாலு, 2021 தேர்தலை மனதில் வைத்து பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மாணவப் பருவத்திலிருந்தே திமுக அனுதாபியாக இருந்துவந்த பாலு, பரமக்குடி தனி தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திமுக-வில் இணைந்தார். அதன் பிறகு பரமக்குடி திமுக-வில் பரபர அரசியல்வாதியான பாலு, கட்சிக்காக கோடிகளை செலவழித்தார். பரமக்குடியில் ‘ஸ்டாலின் தான் வாராரு’ கூட்டத்தை ‘பிரமாதப்’ படுத்தியதில் பாலுவுக்கு பெரும் பங்குண்டு என்று சொல்வார்கள்.
இத்தனையும் செய்துவிட்டு நம்பிக்கையோடு கட்சியில் நாற்பது பேரில் ஒருவராக பரமக்குடி தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்தார் பாலு. ஆனால், அவரை ஒதுக்கிவிட்டு முருகேசனுக்கு சீட் கொடுத்து அவரை எம்எல்ஏ ஆக்கியது திமுக தலைமை. இதனால் மாவட்ட திமுக-வினர் தன்னை கருவேப்பிலை கணக்காய் பயன்படுத்திக் கொண்டு விட்டு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தட்டிவிட்டு விட்டதாகச் சொல்லி அப்செட்டாகிப் போன பாலு, திமுக-வை
விட்டு ஒதுங்கியே இருந்தார். இதைத் தெரிந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள், சமயம் பார்த்து அவரிடம் சரியாகப் பேசி எடப்பாடி பழனிசாமியிடம் அழைத்துச் சென்று அவரை அதிமுக கரை வேட்டி கட்டவைத்துவிட்டார்கள்.
அதிமுக-வில் இணைந்த கையேடு சத்திரக்குடியில் ஒரு வீடு பிடித்து தங்கிவிட்ட பாலு, இப்போது போகலூர் ஒன்றியத்தில் கிராமம் கிராமமாகச் சென்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். தனது தந்தையார் பெயரிலான அறக்கட்டளை மூலம் சத்திரக்குடியில் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தையும் இலவசமாக நடத்தி வரும் பாலு, திமுக தன்னை கைவிட்டாலும் அதிமுக-வில் தனக்கு சீட் உறுதி என்ற நம்பிக்கையில் முன்னைவிட வேகமாகவே களப்பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து பாலுவிடம் கேட்டபோது, “இந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும், அதுவும் சொந்த ஊர் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என நினைக்கிறேன். அதற்காகத்தான் கடந்த முறை திமுக-வில் பரமக்குடி தொகுதிக்கு சீட் கேட்டேன். அதற்காகவே அரசுப் பணியிலிருந்து விருப்ப ஓய்வும் பெற்றேன்.
ஆனால், திமுக-வினர் என்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டனர். அந்தக் கட்சிக்காக சுமார் 10 ஆண்டுகள் எனது பணத்தைச் செலவு செய்திருக்கிறேன். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டது. தற்போது மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலரின் ஆதரவுடன் அதிமுக-வில் இணைந்துள்ளேன். பரமக்குடி தொகுதியில் எனக்கு சீட் கிடைத்தால் சாதி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் எனக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையுடன் 2026 தேர்தலில் அதிமுக தலைமையிடம் நிச்சயம் சீட் கேட்பேன்” என்றார் அவர்.
பரமக்குடி அதிமுக-வை பொறுத்தவரை சதர்ன் பிரபாகர் இங்கு முன்னாள் எம்எல்ஏ-வாக இருக்கிறார். இன்னொரு முன்னாளான டாக்டர் முத்தையா தினகரன் பக்கம் ஊசலாடிவிட்டு வந்தவர் என்பதால் அவரை ஒதுக்கினாலும் பிரபாகரை விட்டுவிட்டு பாலுவுக்கு சீட் கொடுப்பார்களா அல்லது அதிமுக-விலும் பாலுவுக்கு கசப்பான அனுபவத்தையே பரிசாகத் தருவார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.