சென்னை: இந்திய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்.27-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இதன்மூலமாக, ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து, சென்னையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்திய கடல்சார் உச்சிமாநாடு வரும் அக்.27-ம் தேதி முதல் அக்.31-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மும்பையில் நடைபெற உள்ளது. இது துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் உட்பட கடல்சார் துறையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நாட்டின் முக்கியத்தளம் ஆகும்.
இதில், 100 நாடுகளில் இருந்து ஒரு லட்சம் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 500 கண்காட்சிகள் இடம்பெற உள்ளன.இது, ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய கடல்சார் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
வெளிநாட்டு கப்பல்களை இந்தியாவுக்குள் இயக்குவதும், இந்திய கப்பல்களை வெளிநாடுகளுக்கு இயக்குவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். சரக்கு கப்பல்களை தவிர, சுற்றுலா சொகுசு கப்பல்களும் இயக்குவதற்கு வழிவகை செய்யப்படும்.
மஹாராஷ்டிரா மாநிலம் தஹானு அருகில் வாதவன் துறைமுகம் ரூ.80 ஆயிரம் கோடியில் கட்டப்படுகிறது. கடந்த ஆண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 2029-ல் பணிகள் முடித்து, பயன்பாட்டுக்குவரும்போது. இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும்.
கடல் மற்றும் ஆறுகள் அதிகமாக உள்ள மாநிலங்களில், மக்கள் நீர் வழிபோக்குவரத்தை விரும்புகின்றனர். அதன்படி, வாய்ப்புள்ள பகுதி களில் வாட்டர் மெட்ரோ திட்டத்தை, மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவர உள்ளது. இந்தியாவில் 18 நகரங்களில் வாட்டர் மெட்ரோ போக்குவரத்தை கொண்டுவர உள்ளது.
இந்த மாநாடு உலகளாவிய மற்றும் உள்ளூர் தலைவர்களை ஒருங்கிணைத்து உரையாடல், புதுமை மற்றும் கொள்கை முயற்சிகளை ஊக்குவிக்கின்றது. இவை நீடித்த மற்றும் எதிர்காலத்துக்கு தேவையான கடல்சார் சூழலை உருவாக்கும்.
பங்குதாரர்கள் ஊக்குவிப்பு: மேலும், பிராந்திய வணிக மற்றும் வர்த்தக அமைப்புகளை விழிப்புணர்வூட்டுவது மற்றும் மாநிலங்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களை இந்த நிகழ்வில் பங்கேற்க ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். இது உள்ளூர் வணிகத்தை உலகளாவிய அளவுக்கு கொண்டு செல்லவும், கூட்டாண்மைகளை உருவாக்கவும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், துாத்துக்குடி துறைமுகத்தின் தலைவர் சுசந்த குமார், இந்திய துறைமுக சங்கத்தின் நிர்வாக இயக்குநர் விகாஸ் நர்வால், காமராஜர் துறைமுகத்தின் நிர்வாக இயக்குநர் ஐரின் சிந்தியா ஆகியோர் உடன் இருந்தனர்.