சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளைத் திட்டமிட மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, அதிமுக, பாமக, தேமுதிக, நாதக, தவெக ஆகிய கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் சந்திப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பாஜகவும் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அப்போதையை மாநில தலைவர் எல்.முருகன், வேல் யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரை மூலம் தமிழகத்தில் 4 எம்எல்ஏ-க்களை பாஜக பெற்றதாக கூறப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில், அப்போதைய மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை மூலம் மக்கள் சந்திப்பை நடத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்றாலும், அண்ணாமலையின் யாத்திரை தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்த வழிவகுத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் அக்.1-ம் தேதி முதல் யாத்திரை செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியை பலப்படுத்துதல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றும் நோக்கில் இந்த யாத்திரை திட்டமிடப்பட்டுள்ளது. யாத்திரை ஏற்பாடுகளைக் கவனிக்க மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் மாநிலக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில செயலாளர்கள் மீனாட்சி நித்யசுந்தர், கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவர் மகா சுசீந்திரன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு முன்னாள் மாநிலத் தலைவர் லோகநாதன், மாவட்டத் தலைவர்கள் தர்மராஜ், சத்தியமூர்த்தி, இளங்கோ, முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த யாத்திரையை, நெல்லையில் தனது சொந்த தொகுதியில் இருந்தே நயினார் நாகேந்திரன் தொடங்குவார் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.