புதுச்சேரி: அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்சஅளவாக இன்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகளவாக இருந்தது. அத்துடன் கடும் வெப்பத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியதால் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது. ஆனால் புதுச்சேரியில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் தொடர்கிறது.
குறிப்பாக கடந்த வாரம் முழுக்க அதிகளவு வெப்பம் பதிவானது. கிட்டத்தட்ட நூறு டிகிரி அளவுக்கு நெருக்கமாக வெயிலின் தாக்கம் உள்ளது. சனிக்கிழமை 100.8 டிகிரியை தொட்டது. இன்று (ஜூன் 8) நடப்பாண்டிலேயே அதிகளவாக 104 டிகிரி பதிவானது.
நடப்பு கோடையில் ஆறாவது முறையாக புதுச்சேரியில் வெயிலின் அளவு சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையில் 3வது முறையாக நூறு டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.