சென்னை: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த பயணிகளுக்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் ஆர்.என்.ரவி: விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். உயிர் பிழைத்தவர் களுக்காகவும், தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவலுக் காகவும் காத்திருப்பவர்களுக்கு மன வலிமை கிடைக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்து மிகவும் கவலை கொள்கிறேன். சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் மீட்பு, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நம்புகிறேன்.
துணை முதல்வர் உதயநிதி: இதுபோன்ற பேரழிவு மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் விமான நிறுவனங்கள் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள அனைவரும் விரைவில் பூரண உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த வர்களின் குடும்பத்தினர் மீண்டு வர எனது பிரார்த்தனைகள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். சிகிச்சையில் இருப்பவர்கள் விரைவில் நலம்பெறவேண்டும்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: விமானம் தீப்பிடித்து எரிந்த கோர விபத்து நெஞ்சை உலுக்குகிறது.
பாமக தலைவர் அன்புமணி: அதிநவீன வசதிகளுடன் கூடிய போயிங் ட்ரீம் லைனர் விமானங்கள் விபத்துக்குள்ளாக வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்ட நிலையில், இந்த விபத்து பெரும் கவலை அளிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: காயமடைந்தவர்கள் பரிபூரண குணமடைய தேவையான உதவியை மத்திய, குஜராத் மாநில அரசுகள் வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: விமான விபத்தில் சதித்திட்டம் ஏதும் உள்ளதா என்பன உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, வருங்காலங்களில் விபத்து நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: விபத்தில் சிக்கிய பயணிகளை விரைந்து மீட்டு, உயர் மருத்துவ சிகிச்சை அளித்து உயிர் காக்க குஜராத் மாநில அரசு, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: விபத்தில் உயிரிழந் தவர்கள் குடும்பத்தினரின் மன வலியையும், உணரும் துயரத்தையும் வார்த்தைகளால் சொல்ல இயலாது.
தவெக தலைவர் விஜய்: விமான விபத்தில் உயிரிழந் தோருக்கு ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் மீண்டு வர பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர்கள் தெரி வித்துள்ளனர்.
இதேபோல், புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், புதுவை முதல்வர் ரங்கசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முன்னாள் எம்.பி.ஆர்.சரத்குமார், வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.