சென்னை: இன்றைய டிஜிட்டல் சூழ் உலகில் இணைய இணைப்பு இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை. ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என சிவாஜி கணேசனின் திருவிளையாடல் படத்தின் பாடல் வரிகள் அப்படியே கச்சிதமாக இணையத்துக்கு பொருந்தும். அந்த அளவுக்கு உலகை இணைய சேவை இயக்கிக் கொண்டிருக்கிறது.
உணவு ஆர்டர் செய்ய, விண்வெளி உட்பட வீடியோ அழைப்பு மேற்கொள்ள, நமக்கு வேண்டிய தகவல் அல்லது பதில்களை தேடி பெற, பிடித்த நிகழ்ச்சிகளை பார்க்க என மனித வாழ்வின் சர்வமும் இணையமயம் ஆகியுள்ளது. நமது மெய்யான தேடல் கூட இணையம் சார்ந்தே உள்ளது. இருந்தாலும் இதெல்லாம் இப்போதுதான். கடந்த சில பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இந்த நிலை இல்லை.
இந்தியா 79-வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. உலகில் யுபிஐ வழியிலான டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் இந்தியா முன்னோடியாக வளர்ந்து நிற்கிறது. அண்மையில் 70+ கோடி பரிவர்த்தனையை ஒரே நாளில் இந்திய மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்தியாவின் இணைய (இன்டர்நெட்) புரட்சி குறித்து பார்ப்போம். கடந்த 1995-ம் ஆண்டில் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று தான் இந்தியாவில் பொது பயன்பாட்டுக்கு இன்டர்நெட் சேவை தொடங்கியது.
இந்தியாவில் இன்டர்நெட் – A டூ Z: கடந்த 1986-ல் இந்தியாவில் இன்டர்நெட் சேவை அறிமுகமாகி உள்ளது. அப்போது அது தொழில்நுட்ப மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. ERNET என அறியப்பட்ட அந்த இணைய சேவை குறிப்பிட்ட கல்வி மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது.
பின்னர் கடந்த 1995, ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று இந்தியாவில் பொது பயன்பாட்டுக்கான இணைய சேவை அறிமுகமானது. அங்கிருந்துதான் இந்தியாவின் இணைய புரட்சி தொடங்கியது. அப்போது 9.6 kbps என்ற வேகத்தில் விஎஸ்என்எல் நிறுவனம் இன்டர்நெட் சேவையை வழங்கியுள்ளது. அதை அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் பயன்படுத்தி உள்ளன.
பின்னர் 1998-ல் தனியார் நிறுவனம் இன்டர்நெட் சேவையை அறிமுகம் செய்தது. இது முக்கிய தடமாக அமைந்துள்ளது. சத்யம் இன்போவே நிறுவனம் அந்த சேவையை அப்போது வழங்கியுள்ளது. பின்னர் 2004-ம் ஆண்டு மத்திய அரசு, முதல் பிராட்பேண்ட் கொள்கையை அறிவித்தது. அதுதான் அதிவேக மற்றும் நம்பகமான இன்டர்நெட் சேவையாக இருந்துள்ளது.
21-ம் நூற்றாண்டின் தொடக்க பத்து ஆண்டுகள் இந்தியாவில் இன்டர்நெட் பாய்ச்சலை பரவலாக்கி உள்ளது. அதுவரை கணினி மூலம் மட்டுமே இன்டர்நெட் பயன்படுத்த முடியும் என்ற நிலை மாறி இருந்த தருணம் அது. இணைய இணைப்பு அம்சம் கொண்ட மொபைல்போன்களின் வரவும், 2ஜி மற்றும் 3ஜி வரவும் அதை மாற்றி இருந்தன. இந்த காலகட்டத்தில் தான் இன்டர்நெட் இணைப்பின் வேகம் கூடியது. அதோடு பயன்பாடு எளிதாகவும், பரவலாகவும் கிடைத்தது முக்கிய காரணமாக அமைந்தது.
கடந்த 2023-ம் ஆண்டின் தரவுப்படி இந்தியாவில் 700 மில்லியன் பயனர்கள் ஆக்டிவாக இன்டர்நெட் சேவையை பயன்படுத்தினர். இது இந்தியாவின் நகர்புறம் மற்றும் கிராமப்புறம் என அனைத்துக்குமானது. பின்னர் தனியார் டெலிகமாம் நிறுவனங்கள் மற்றும் இணைய சேவை வழங்கும் நிறுவனங்களின் முயற்சி காரணமாக 5ஜி வேகத்தில் இப்போது இந்திய மக்களின் இன்டர்நெட் சேவை அமைந்துள்ளது. இதன் காரணமாக இன்று இந்தியா உலக டிஜிட்டல் களத்தில் முக்கிய சந்தையாக மாறியுள்ளது. மெட்டா, அமேசான், எக்ஸ், கூகுள் என அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு முக்கிய சந்தையாக இந்தியா அமைந்துள்ளது. அதன் மூலம் இந்தியாவும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளது.