சென்னை: வால்வோ கார் இந்தியா நிறுவனம் இ.எக்ஸ்.30 மாடல் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: பண்டிகை காலத்தை முன்னிட்டு வால்வோவின் புதிய தயாரிப்பான இ.எக்ஸ்.30 மாடல் மின்சார கார் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அக்டோபர் 19-க்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.39,99,000 என்ற சலுகை விலையில் இந்த கார் வழங்கப்படும். நவம்பர் முதல் வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும்.
வால்வோவின் 3-வது இவி மாடலான இ.எக்ஸ்.30 பெங்களூருவின் ஹோசகோட்டேயில் உள்ள ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது. ஒவ்வொரு இ.எக்ஸ்.30 காருடன் 11-கிலோவாட் சார்ஜர் சலுகையாக வருகிறது. புதுமையான தொழில்நுட்பம், சமரசம் செய்யாத பாதுகாப்பு இதன் சிறப்பம்சம். விபத்துகளை தடுப்பதற்கான எச்சரிக்கை கருவிகள், 5 கேமராக்கள், 5 ரேடார்கள், 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் கொண்ட மேம்பட்ட பாதுகாப்பு கருவிகளை இ.எக்ஸ்.30 கொண்டுள்ளது.
3 வருட முழுமையான உத்தரவாதம், 3 வருட வால்வோ சர்வீஸ் பேக்கேஜ், 8 வருட பேட்டரி உத்தரவாதம் உட்பட பல சலுகைகளும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஜோதி மல்ஹோத்ரா தெரிவித்தார்.