சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம்.
வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்-அப் அறிமுகம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் வாட்ஸ்-அப் மெசஞ்சரில் பயனர்களை ஈர்க்கும் வகையில் மெட்டா ஏஐ மூலம் சாட் தீமை கஸ்டமைஸ் செய்து கொள்ளும் அம்சம், வீடியோ அழைப்பில் பேசும்போது ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட பேக்கிரவுண்ட், செயலியில் இருந்தபடியே போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்து அதிலும் பேக்கிரவுண்டை மாற்றும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய அப்டேட்கள் விரைவில் உலக அளவில் பயனர்களுக்கு கிடைக்கப்பெறும் என தகவல். இது அனைத்து தரப்பு பயனர்களையும் ஈர்க்கும் என மெட்டா நம்புகிறது.
காரணம் என்ன? – அண்மைய நாட்களாக இந்தியாவில் உள்ள பயனர்கள் மத்தியில் சோஹோ நிறுவனத்தின் ‘அரட்டை’ மெசேஜிங் செயலி பேசுபொருளாகி உள்ளது. இந்திய அளவில் ஆப் ஸ்டோரில் ‘மெசேஜிங் ஆப்’ பிரிவில் அரட்டை முன்னிலை பெற்றுள்ளது. அரட்டை செயலியின் டவுன்லோட் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் மெட்டா உட்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்திய சந்தை முக்கியமானதாக அமைந்துள்ளது.
அரட்டை செயலியை வாட்ஸ்-அப் உடன் ஒப்பிடும் போது வாட்ஸ்-அப்பில் இருப்பது மாதிரியான அம்சங்கள் அதிகம் இல்லை. இருப்பினும் தங்களது பிடியை தளர்த்த கூடாது என்பதில் மெட்டா உறுதியாக இருப்பதனால் புதிய அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளதாக டெக் துறை சார்ந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.