சென்னை: வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களை உடனடியாக மொழிபெயர்க்கும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள பயனர்களுக்கு அறிமுகமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரில் பயனர்களுக்கு வரும் மெசேஜ்களை உடனடியாக செயலியிலேயே மொழிபெயர்க்கும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களில் ஆறு மொழிகளும், ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதள போன்களில் சுமார் 19 மொழிகளும் மொழிபெயர்க்கலாம். இந்த அம்சம் படிப்படியாக உலக அளவில் உள்ள பயனர்களுக்கு அறிமுகமாகும் என தகவல்.
பயன்படுத்துவது எப்படி? – பயனர்கள் தங்களுக்கு வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜ்களை மொழிபெயர்க்க விரும்பினால், அந்த குறிப்பிட்ட மெசேஜை லாங்-பிரஸ் செய்து டிரான்ஸ்லேட் ஆப்ஷனை தேர்வு செய்யலாம். அதில் தங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் மூலம் அடுத்த முறை டிரான்ஸ்லேட் ஆப்ஷனை பயனர்கள் தேர்வு செய்யும் போது, அந்த குறிப்பிட்ட மெசேஜ் நேரடியாக அவரது விருப்ப மொழியில் டிரான்ஸ்லேட் ஆகிவிடும்.
குறிப்பிட்ட மெசேஜ் மட்டுமல்லாது மொத்த சாட்டையும் அப்படியே டிரான்ஸ்லேட் செய்யும் அம்சமும் உள்ளது. இதற்கு பயனர்கள் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்லேட் ஆப்ஷனை சம்பந்தப்பட்ட சாட்/குரூப்பில் தேர்வு செய்திருக்க வேண்டும். இந்த அம்சம் படிப்படியாக வாட்ஸ்அப் பயனர்களுக்கு அறிமுகமாகும்.