சென்னை: சாட்ஜிபிடி-யின் ஏஐ சாட்பாட்டில் பயனர்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட சாட்கள் கூகுளில் கசிந்ததாக தகவல் வெளியானது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
கசிந்துள்ள சாட்ஜிபிடி பயனர்களின் உரையாடல்கள் கூகுளில் இடம்பெற்று இருந்தாலும் அதை எப்படி தேடுவது என அறிந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. இதில் பயனர்கள் மேற்கொண்ட ப்ராம்ப்ட் மற்றும் அதற்கு ஏஐ ஜெனரேட் செய்த பதில்கள் இதில் கிடைக்கப் பெறுவதாக தகவல்.
இதற்கு காரணம் என்ன? – சாட்ஜிபிடி-யில் உள்ள ‘ஷேர்’ அம்சம்தான் இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்களின் உரையாடல்கள் லிங்குகளாக ஜெனரேட் ஆவதாக ஃபாஸ்ட் கம்பெனி என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த லிங்குகள் பிரைவேட்டாக இல்லாமல் தேடுபொறிகளில் இடம்பெற்றுள்ளது தான் இந்த சிக்கலுக்கு காரணம். அதன் ஊடாக இப்போது அது கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் இடம்பெற்றது தெரியவந்தது. chatgpt.com/share என தேடுவதன் மூலம் பயனர்களின் உரையாடல்களை தேடுபொறிகளில் பெற முடிவதாக தகவல் வெளியானது.
ஓபன் ஏஐ சொல்வது என்ன? – பயனர்களின் சாட்கள் தேடுபொறிகளில் கிடைப்பதாக தகவல் வெளியானதும் ‘ஷேர்’ அம்சத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கிவிட்டதாக சாட்ஜிபிடி-யை வடிவமைத்த ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்தது. இதுவொரு குறுகிய கால பரிசோதனை முயற்சி என்று ஓபன் ஏஐ தெரிவித்தது.
சாட்ஜிபிடி? தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட் தான் சாட்ஜிபிடி. இதனை ஓப்பன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.
கடந்த 2022-ம் ஆண்டின் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி ஜெனரேட்டிவ் ஏஐ சாட்பாட்டை பொது பயன்பாட்டுக்கு அறிமுகம் செய்தது. அது டிஜிட்டல் பயனர்கள் மத்தியில் அதீத வரவேற்பைப் பெற்றது. கிட்டத்தட்ட ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை அது ஏற்படுத்தியது. கதையைச் சொல்ல, கட்டுரை படிக்க, பாடல் எழுத என பயனர்கள் கேட்கும் சகல கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கும் இதில் பதில் கிடைக்கும்.