சென்னை: ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக ஏர்டெல் திகழ்கிறது. இந்நிலையில், அந்நிறுவனம் தனது மொபைல், பிராட்பேண்ட் மற்றும் டிடிஹெச் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு கட்டணமின்றி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வெப் சேர்ச் சார்ந்து உரையாடல் பாணியிலான பதில்களை Perplexity வழங்கி வருகிறது. பயனர்களின் தேடலை வெறும் லிஸ்டிங் பாணியில் இல்லாமல் நேரடியாக, ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட வகையில் பதில்கள் இதில் கிடைக்கிறது. Perplexity-ன் அடிப்படை வெர்ஷன் அனைத்து பயனர்களுக்கும் இலவசமாக கிடைக்கிறது. அதே நேரத்தில் Perplexity புரோ பயன்பாடு மேம்பட்ட அம்சத்துடன் தகவல்களை தருகிறது. அதுவும் இந்த தகவல்கள் ரியல் டைமில் இருக்கும்.
இந்நிலையில்தான் Perplexity புரோவை ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இலவசம் என அறிவித்துள்ளது. ஏஐ மாடல்களான ஜிபிடி-4.1 மற்றும் Claude உள்ளிட்ட பயன்பாடுகளையும் இதில் பெற முடியும்.
ஏர்டெல் பயனர்கள் இதை பெற ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் லாக்-இன் செய்து அனுமதி தர வேண்டி உள்ளது. முதல் முறையாக இந்தியாவில் உள்ள டெலிகாம் நிறுவனம் ஒன்றுடன் Perplexity கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு ஜப்பானின் சாப்ட் பேங்க் மற்றும் அமெரிக்காவின் டி-மொபைல் உடன் சேர்ந்து பயனர்களுக்கு தனது சேவையை Perplexity வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மொபைல் செயலி மற்றும் பிரவுசரில் இதை ஏர்டெல் பயனர்கள் பயன்படுத்த முடியும். ரூ.17,000 மதிப்புள்ள இந்த Perplexity Pro AI சேவையை பயனர்களுக்கு கட்டணமின்றி வழங்குவதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதற்கு பயனர்கள் தங்களது ஜிமெயில் அல்லது வேறு கணக்கு மூலம் லாக்-இன் செய்ய வேண்டி உள்ளது.