சென்னை: இந்தியாவில் அனைவருக்கும் ஆதார் அட்டை அவசியமானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், யுஐடிஏஐ அமைப்பு விரைவில் ‘இ-ஆதார்’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் பயனர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை தாங்களாகவே அப்டேட் செய்யலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செயலியின் மூலம் மக்கள் ஆதார் சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை மாற்றவோ அல்லது அப்டேட் செய்யவோ முடியும் என கூறப்படுகிறது. இந்த செயலி நடப்பு ஆண்டின் இறுதியில் வெளியாகும் என தனியார் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது பயனர்கள் ஆதார் அட்டையில் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டி உள்ளது. இந்த செயலி அதற்கு தீர்வாக அமையும் என தெரிகிறது.
இந்த செயலி ஏஐ மற்றும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டு வருவதாக தகவல் கூறப்படுகிறது. முழுவதும் டிஜிட்டல் சேவையை வழங்கும் இந்த செயலியில் பயனர்கள் தடையின்றி பயன்படுத்தலாம் என்றும், இதில் பல்வேறு ஆதார் சேவைகளை பெறலாம் என்றும் தகவல். அதேநேரத்தில் கண்விழி மற்றும் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனிங் உள்ளிட்ட பயோமெட்ரிக் சரிபார்ப்புக்கு மட்டுமே ஆதார் சேவை மையங்களுக்கு மக்கள் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி அறிமுகமானதும் அதில் ஆதார் அட்டைதாரர்கள் லாக்-இன் செய்து தங்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி போன்றவற்றை மாற்றலாம். இந்த செயலியில் பயனர்கள் பதிவேற்றும் ஆவணத்தின் விவரத்தை அரசு சரிபார்த்த பின்னர் அந்த மாற்றம் ஆதாரில் அப்டேட் ஆகும் என தெரிகிறது.