சென்னை: இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ, ‘அரட்டை’ எனும் மெசேஜிங் செயலி இந்திய மக்களிடையே அதிகம் கவனம் பெற்று வருகிறது. இந்த செயலி குறித்து சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2021-ல் இந்த செயலியை சோஹோ தளம் வெளியிட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த செயலி செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக இந்த செயலியை அதிகளவில் ஸ்மார்ட்போன் பயனர்கள் டவுனோல்டு செய்து வருகின்றனர். இதன் டவுன்லோடு எண்ணிக்கை இப்போது நூறு மடங்கு வேகத்தில் உள்ளது. அதாவது நாளொன்றுக்கு 3,000-லிருந்து 3.5 லட்சமாக டவுன்லோடு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இந்தச் செயலில் இந்தியாவில் வாட்ஸ்-அப் செயலிக்கான மாற்று என பலர் கருதுகின்றனர்.
வழக்கமாக ஒரு மெசேஜிங் செயலியில் பயனருக்கு என்னென்ன தேவையோ அத்தனை அம்சங்களையும் இந்த அரட்டை செயலி கொண்டுள்ளது. வீடியோ அழைப்புகள், டெக்ஸ்ட் மெசேஜ்கள், லொகேஷன் ஷேரிங், படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுப்ப, ஸ்டோரீஸ் உள்ளிட்ட அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
அரட்டை செயலியை பயன்படுத்துவது எப்படி? – வாட்ஸ்-அப் செயலி போலவே அரட்டை செயலியை பயன்படுத்தவும் பயனர்கள் தங்கள் மொபைல் எண் துணையோடு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் ‘அரட்டை’ செயலியில் பதிவு செய்த மற்ற பயனர்களுடன் சாட் செய்யலாம்.
இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோட் செய்து, தங்கள் போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். மேலும், பயனர் ஒருவர் தனது அரட்டை கணக்கை ஐந்து சாதனங்களுடன் லிங்க் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி ஆண்ட்ராய்டு டிவி சப்போர்ட்டை கொண்டுள்ளது.
இருப்பினும் இதில் எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் என்பது மெசேஜ்களுக்கு இல்லை. அதே நேரத்தில் அழைப்புகளுக்கு இந்த வசதி உள்ளது. அனுப்புநர் மற்றும் பெறுநரைத் தவிர வேறு யாரும் செய்தியை அணுக முடியாது என்பதை எண்டு-டூ-எண்டு என்கிரிப்ஷன் உறுதி செய்கிறது. இது வாட்ஸ்-அப்பில் உள்ளிட்ட பிற மெசேஜிங் தளங்களில் உள்ளது. விரைவில் இதற்கு தீர்வு காணப்படும் என சோஹோ தெரிவித்துள்ளது.