புதுடெல்லி: சோஹோ நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘அரட்டை’ செயலியை முழு வீச்சில் கொண்டு வர தீவிரமாக இருக்கிறார்.
இந்தியாவில் உருவாக்கப்பட்ட அரட்டை செயலி இலவசமானது, பயன்படுத்த எளிதானது, பாதுகாப்பானது. சோஹோவால் தொடங்கப்பட்ட அரட்டை செயலியை வாட்ஸ் அப், டெலிகிராம் போல் பயன்படுத்தலாம். இந்நிலையில், ‘அரட்டை’ செயலியின் குளோபல் புராடெக்ட் தலைவர் ஜெரி ஜான் முதல் முறையாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: அரட்டை செயலி 10 லட்சம் வாடிக்கையாளர்களை தாண்டி விட்டது என்ற தகவலை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். தற்போது ‘மேட் இன் இந்தியா’ தயாரிப்புகள் விஷயத்தில் பயனாளிகள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். ஆனால், இந்த எண்ணத்தை நீடித்து நிலைக்க செய்வதற்காக எங்கள் குழு மும்முரமாக பணியாற்றிவருகிறது. குறிப்பாக தனியுரிமை, மதிப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறோம்.
உரையாடல் மற்றும் வீடியோ அழைப்புகளைப் பொறுத்த வரையில் முழுமையான பாதுகாப்புதான் (எண்ட் டூ எண்ட் என்கிரிப்ஷன்) அதிகபட்ச முன்னுரிமையாக இருக்கிறது. அரட்டை செயலியில் யுபிஐ போன்ற பல்வேறு வசதிகளை சேர்ப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.
வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை இருக்குமா என்பது குறித்து கேட்கிறார்கள்? எங்களைப் பொறுத்த வரையில் ஒரு பொருள் வாடிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்கதாக இருந்தால், அதை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம். போட்டி என்பது புதுமைகளை கொண்டு வரவும், வர்த்தகத்தில் ஈடுபடவும் போட்டி உதவும்.
அரட்டை பெயரை மாற்றும் எண்ணம் எதுவும் இல்லை. வாடிக்கையாளர்களின் தகவல்களை மூன்றாவது நபருக்கு கண்டிப்பாக விற்க மாட்டோம். எதிர்கால வளர்ச்சிக்கான வழிமுறைகளையும் எங்கள் ஆர் & டி குழு ஆய்வு செய்து வருகிறது. இவ்வாறு ஜெர்ரி ஜான் கூறினார்.