புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் உடனடியாக அதில் தலையிடுவோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி (SIR) நடைபெற்று வருகிறது. இந்த திருத்தப் பட்டியல் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், ஏடிஆர் தொண்டு நிறுவனம் உட்பட பல்வேறு தரப்பில் 11 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜரானார்.
மனுதாரர்கள் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், “ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியிட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்துவிட்டதாகவோ அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாறிவிட்டதாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த நீதிபதி ஜோய்மல்யா பக்சி, “தேர்தல் ஆணையம் இறந்துவிட்டதாகக் கூறும் 15 பேரை நீங்கள் அழைத்து வாருங்கள். நாங்கள் அதை பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
“வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது. அதுவரை காத்திருங்கள். தற்போது எழுப்பப்படும் அச்சங்கள் வெறும் ஊகங்களே” என்று நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். மேலும் அவர், “உச்ச நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் ஜனவரி 7, 2025 தேதியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2025-ம் தேதி வரை (உயிரோடு) இருப்பவர்களின் பெயர்கள் வாக்காளர் வரைவு பட்டியலில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ள வரைவுப் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இருக்காது என்பது உங்கள் அச்சம். அதேநேரத்தில், வரைவு பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயர்களைச் சேர்க்க தேர்தல் ஆணைய அட்டவணை கால அவகாசம் அளிக்கிறது. அதாவது, இந்த வாக்காளர்கள் புதியவர்களாக அல்லாமல், ஏற்கெனவே உள்ளவர்களாக இருப்பார்கள்” என தெரிவித்தார்.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி மனு அளிக்க 31 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அரவ்கள் செப்டம்பர் 1-ம் தேதி வரை கோரிக்கை மனுவை அளிக்கலாம். திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 30-ம் தேதிதான் வெளியிடப்பட உள்ளது” என கூறினார்.
அப்போது, “வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் அடங்கிய பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். அப்போதுதான், அவர்கள் யார் என்பது குறித்து நாங்கள் தெரிந்துகொள்ள முடியும். அப்போதுதான், நாங்கள் சரிபார்க்கவும் முடியும்” என கபில் சிபல் வாதிட்டார். இதற்கு பதில் அளித்துப் பேசிய ராகேஷ் திவேதி, நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த பட்டியல் இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோய்மல்யா பக்சி, “தேர்தல் ஆணையம் ஓர் அரசியலமைப்பு நிறுவனம். அது சட்டத்தின்படி சரியாகச் செயல்படும் என்ற எண்ணம் உள்ளது. ஒருவேளை அவர்கள் அதில் இருந்து விலகுவார்களேயானால், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டால் நாங்கள் நிச்சயம் தலையிடுவோம்” என தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.