புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்பிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் இன்று வழக்கம்போல் காலை 11 மணிக்குக் கூடியது. மக்களவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் ஒம் பிர்லா அறிவித்தார். இதை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கண்டித்தும் வாக்குகள் திருடப்படுவதாகக் குற்றம் சாட்டியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கேள்வி நேரம் தொடர ஒத்துழைக்குமாறும் சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி 20 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவை ஏற்கப்படாது என்றும் அவர் கூறினார். இதையடுத்து, மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர் அமளி காரணமாக அவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார்.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பிஹார் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “வாக்குத் திருட்டு, வாக்கு மோசடி, வாக்குகளை முறைகேடாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு சூழலை நாடு முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இதுபோன்ற திருட்டு மூலம் அவர்கள் அரியணையில் அமர்ந்தால், அது ஜனநாயகத்திற்கு நன்மை பயக்காது. இது அரசியலமைப்பின் படுகொலை” என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஏற்கத்தக்கதாக இல்லை. தேர்தல் ஆணையம், குறிப்பாக ஞானேஷ் குமாரும் மற்றவர்களும் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார்கள். அவர்கள் பாஜகவின் மொழியைப் பேசத் தொடங்கியுள்ளனர். இது நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது. சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் 16வது நாளாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். எனினும், திமிர்பிடித்த இந்த அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை” என விமர்சித்தார்.
சிவசேனா எம்.பி மிலிந்த் தியோரா, “தாங்கள் பெற்ற தேர்தல் தோல்விகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்ப, அவர்கள் (எதிர்க்கட்சிகள்) முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் குறை கூறி வந்தனர், இன்று அவர்கள் வாக்காளர் பட்டியலைக் குறை கூறுகிறார்கள். அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அதை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அதை நிராகரித்தது. மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே இதன் பொருள்” என தெரிவித்தார்.