புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்படாததால் மக்களவை இன்று காலை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை அரசு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முன்னேற வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் 11-வது நாளான இன்று மக்களவை காலை 11 மணிக்குக் கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் ஓம் பிர்லா இதனை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவையில் அமளி நீடித்ததை அடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா, “இது (Bihar SIR) மிகவும் தீவிரமான பிரச்சினை. இது வாக்காளர் பட்டியல் தொடர்பானது எனும்போது நாங்கள் ஏன் இந்தப் பிரச்சினையை எழுப்பக்கூடாது? அரசாங்கம் விவாதத்துக்கு ஒப்புக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்” என தெரிவித்தார்.
முன்னதாக, Bihar SIR விவகாரம் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார். அவர் அந்த தீர்மானத்தில், “SIR விவகாரம் ஏழை எளிய மக்களை பாதித்துள்ளது. பலர் வாக்குரிமையை இழந்துள்ளனர். இதுபோன்ற இலக்கு வைக்கப்பட்ட வாக்குரிமை இழப்பு அடுத்ததாக அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற பிற மாநிலங்களுக்கும் பரவக்கூடும்.
இந்த நடைமுறையின் சட்டப்பூர்வ தன்மை குறித்தும் விளைவுகள் குறித்தும் விரிவான வெளிப்படையான விவாதம் அவையில் நடத்தப்பட வேண்டும். வாக்களிப்பதற்கான அரசியலமைப்பு உரிமைக்கு இது அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்தப்படுவதை இது பாதிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.