புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனை ஏற்க மறுத்த சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரம் தொடரும் என்றும் உறுப்பினர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, உங்கள் அணுகுமுறை மிகவும் தவறானது. நாடாளுமன்ற விதிமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். ஜனநாயகம் வலுப்பட வேண்டும் என்றால், பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதுபோல் அமளியில் ஈடுபடுவதற்காக உங்களை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. மக்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் நீங்கள் பேச வேண்டும் என்பதற்காகவே உங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.
சபாநாயகரின் வார்த்தைகளை ஏற்க மறுத்த உறுப்பினர்கள், அவரது இருக்கையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, அவையை 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் கூடியது. அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதை ஹரிவன்ஷ் ஏற்க மறுத்ததை அடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் அவர்களை சமாதானப்படுத்த ஹரிவன்ஷ் முயன்றார். எனினும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்ததால் அவையை 12 மணிக்கு ஒத்திவைத்தார். அவை மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நாடாளுமன்றத்துக்கு வெளியே எதிர்க்கட்சி எம்பிக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து இரு அவைகளும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். பிஹார் வாக்காளர் பட்டியலின் வரைவுப் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.