புதுடெல்லி: பிஹாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு ஆதார் அடையாள அட்டையை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்ய காந்த், ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் 11 ஆவணங்களை ஏற்கிறது. ஆதார் அடையாள அட்டையையும் ஒரு செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
அப்போது நீதிபதி சூர்ய காந்த், ஆதாரை குடியுரிமை சான்றாக நீங்கள் கருதுகிறீர்களா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த கபில் சிபல், “ஆதாரை குடியுரிமை சான்றாகக் கருதவில்லை. மாறாக, வசிப்பிடத்துக்கான சான்றாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறேன். இதனால், ஒருவர் வாக்களிக்க முடியும். ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது. ஆனால், எங்களுக்கு ஆதாரை தேர்தல் ஆணையம் செல்லுபடியாகும் ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, “ஆதார் குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படவில்லை. ஆதார் ஒரு வசிப்பிடச் சான்று என கபில் சிபல் கூறுவதை ஒப்புக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.
நீதிபதி ஜாய்மால்யா, “மனுதாரர்கள் ஆதாரை குடியுரிமைக்கான சான்றாக கருதவில்லை. சட்டப்பூர்வமாகவும் ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதாரை செல்லுபடியாகும் ஓர் ஆவணமாகக் கருதுவது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு ஆதார் அந்நியமானது அல்ல. சட்டத்தின் ஒரு விதி ஆதாரை வசிப்பிடச் சான்றாக அனுமதிக்கிறது” என தெரிவித்தார். அப்போது வாதிட்ட கபில் சிபல், “ஆதாரை 12-வது ஆவணயமாக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தினார்.
அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வாதிட்ட ராகேஷ் திவேதி, “பாஸ்போர்ட், நில ஆவணம், பிறப்புச் சான்றிதழ் போன்ற அந்தஸ்தை ஆதார் பெறவில்லை. குடியுரிமைக்கான சான்றாக பாஸ்போர்ட்டை கருதுவதற்கு இணையாக ஆதாரை குடியுரிமைக்கான ஆவணமாகக் கருத முடியாது. எனினும், அடையாள சான்றாக ஆதாரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கிறது. அவ்வாறு இருக்க, ஆதாரை 12-வது ஆவணமாக அறிவிக்க வேண்டும் என ஏன் வலியுறுத்த வேண்டும்? வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள 7.24 கோடி வாக்காளர்களில் 99.5% பேர் சிறப்பு தீவிர திருத்த செயல்பாட்டில் தங்கள் தகுதி ஆவணங்களை தகுதி செய்துள்ளனர்” என வாதிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கபில் சிபல், “ஆதார் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “தேர்தல் ஆணையத்தால் சுட்டிக்காட்டப்பட்ட 11 ஆவணங்களும் அடையாளம் மற்றும் வசிப்பிடத்துக்கான ஆவணங்கள்தான். அவை குடியுரிமைக்கான ஆவணங்கள் அல்ல. ஆதாரும் அத்தகையதே. எனவே, ஆதாரை செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்க வேண்டும்” என கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஆதாரை 12-வது ஆவணமாக சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆதார் அடையாளச் சான்றாக மட்டுமே பயன்படுத்தப்படும். 11 ஆவணங்களைப் போலவே, ஆதாரின் நம்பகத்தன்மை மற்றும் உண்மைத்தன்மையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு உரிமை உண்டு. இந்த உத்தரவை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் விளம்பரப்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை நீதிபதிகள் வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.