பாட்னா: மூத்த தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்தால் பிஹார் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிஹாரில் வரும் அக்டோபரில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜக நன்கு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “75 வயது முடிந்தவர்கள் அடுத்தவர்களுக்கு வழிவிடுவதுதான் இயற்கையானது” என்று அண்மையில் கூறினார். ஆர்எஸ்எஸ் தனது தாய் அமைப்பு என்பதால், அதன் கொள்கைகளை அமலாக்குவதை பாஜக தனது கடமையாக கொண்டுள்ளது. இந்நிலையில், பாகவத்தின் 75 வயது கருத்தை பிஹார் தேர்தலில் அமலாக்குவதா, வேண்டாமா என பாஜக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிகிறது.
ஏனெனில், பிஹாரில் 15-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களுக்கு 75 வயது நிரம்பி விட்டது. ஆராவின் 4 முறை எம்எல்ஏ அமரேந்திர பிரதாப் சிங் (77), முன்னாள் விவசாய அமைச்சர். சி.என்.குப்தா (78), அருண் குமார் சின்ஹா (74), சபாநாயகர் நந்த்கிஷோர் யாதவ் (71) என பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இவர்களுக்கு மாற்றாக வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் கிடைப்பதும் கடினமாக உள்ளது.
இந்த விவகாரத்தில் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். பிஹார் பாஜக தலைவர் பிரேம் ரஞ்சன் படேல் கூறும்போது, “ஆர்எஸ்எஸ் தலைவரின் கருத்து முக்கியமானதுதான். ஆனால் நாங்கள் பிறந்த ஆண்டை அல்ல, பிரபலத்தின் அடிப்படையில் தான் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்” என்றார்.
மற்றொரு தலைவர் சுரேஷ் ருங்டா கூறும்போது, “நீங்கள் ஆரோக்கியமாகவும் பிரபலமாகவும் இருந்தால், வயது என்பது ஒரு எண் மட்டுமே. தேர்தலில் வெற்றி பெறுவதை தவிர வேறொன்றும் முக்கியம் அல்ல” என்றார்.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் பிஹார் பாஜக வட்டாரம் கூறும்போது, “பாஜகவின் உள் ஒழுக்கத்திற்கும் தேர்தல் வசதிக்கும் பெரும் சோதனை நேரம் இது. இளைஞர்களாக பல தொகுதிகளுக்கு வெற்றி வேட்பாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். இதை சமாளிக்க, மூத்த தலைவர்களை மாநிலங்களவை அல்லது சட்டமேலவைக்கு அனுப்பலாம். எனவே, இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
பிஹாரில் பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி வலுவான அணியாக வளர்ந்துள்ளது. இதனால், மதம், சமூகம் அடிப்படையிலான பிஹார் அரசியலில் மோகன் பாகவத்தின் கருத்து மாநில பாஜகவுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது