ஜம்மு: தெற்கு காஷ்மீரில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 3,880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்த ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம், கந்தர்பால் மாவட்டத்தில் பல்தல் ஆகிய இரு வழித்தடங்களில் இந்த யாத்திரை நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான யாத்திரையை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த 2-ம் தேதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுவரை சுமார் 1.28 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு அடிவார முகாமில் இருந்து 7,307 பக்தர்களை கொண்ட 9-வது குழு நேற்று அமர்நாத் புறப்பட்டது. இக்குழுவில் 5,534 ஆண்கள், 1,586 பெண்கள், 25 குழந்தைகள் மற்றும் 162 சாதுக்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் 284 வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் பஹல்காம் மற்றும் பல்தல் நோக்கிச் சென்றனர். இந்த ஆண்டு யாத்திரைக்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 9-ம் தேதி யாத்திரை முடிவடைய உள்ளது. கடந்த ஆண்டு 5.10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.