பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மண்டியா ஆகிய இடங்களில் கடந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதேபோல காவிரியின் துணை ஆறான கபிலா உற்பத்தியாகும் கேரளாவின் வயநாட்டிலும் கனமழை பெய்தது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அமைந்துள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது.
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கபட்ணாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நேற்று முன் தினம் இரவு முழு கொள்ளளவை (124.80 அடி) எட்டியது. இதையடுத்து முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அமைச்சர்கள் மகாதேவப்பா, செலுவராயசாமி ஆகியோர் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு கிருஷ்ணராஜசாகர் அணையில் உள்ள காவிரி அன்னையின் சிலைக்கு பாகினா சமர்ப்பணப் பூஜை செய்தனர்.
மேகேதாட்டுவில் அணை: பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 1960-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு 65 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழாண்டில் ஜூன் மாதத்திலேயே அணை நிரம்பியுள்ளது. கனமழை பெய்ததால் அண்டை மாநிலங்களுடன் நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் ஏற்படாது என நினைக்கிறேன். இனி வருகின்ற நாட்களில் அணைக்கு வரும் நீரை மொத்தமாக தமிழகத்துக்கு திறந்துவிட போகிறோம். மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளது. தமிழக அரசிடம் காவிரி நீரை தேக்கி வைக்க அணைகள் இல்லை. அவ்வளவு நீரும் கடலுக்கு தான் போய் சேரும்.
மேகேதாட்டுவில் புதிதாக அணை கட்டினால் மழை காலங்களில் கடலுக்கு வீணாக போகும் நீரை நாம் சேமிக்க முடியும். இதனால் இரு மாநில விவசாயிகளும் பயனடைவார்கள். தமிழக அரசிடமும் மத்திய அரசிடமும் பேச்சுவார்த்தை நடத்தி மேகேதாட்டுவில் அணை கட்டப்படும். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு: கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் தமிழகத்துக்கு செல்வதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.