திருமலை: திருமலையில் உள்ள அன்ன மைய்யா பவனில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநில அறநிலைய துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடு ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி பேசியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், வேதம் படித்து வேலை தேடும் இளம் வேதபண்டிதர்கள் மாநிலத்தில் 590 பேர்உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகையாக ரூ.3000 வழங்கப்பட உள்ளது. திருப்பதி ஸ்ரீவாணி அறக்கட்ட ளைக்கான நிதியில் விஜயவாடா கனகதுர்க்கையம்மன் கோயி லுக்கு செல்ல மேலும் இரு வழி சாலைகள் அமைக்க நிதிஒதுக்கும்படியும் திருப்பதி தேவஸ்தானத்தை கேட்டுள்ளோம்.
திருப்பதி தேவஸ்தானத்தில் இன்னமும் வேற்று மதத்தினர் பணியாற்றி வருவதாக வரும் செய்திகளில் உண்மை உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட் டுள்ளது.திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள், கல்லூரிகளில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வீடுகளில் சோதனை: இந்நிலையில், நேற்று திருமலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி கூறியதாவது: சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வந்த 22 வேற்று மதத்தவர்கள் அடையாளம் காணப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த வாரம் புத்தூருக்கு சென்று வாராவாரம் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து வந்த ஒரு தேவஸ்தான உயர் அதிகாரியையும் பணி நீக்கம் செய்துள்ளோம்.
இதுபோன்று இந்துக்கள் பெயர்களை வைத்து கொண்டு, ஏழுமலையான் மீது எவ்வித பக்தியும் இன்றி, வெளியில் இந்துவாகவும், வீட்டில் வேற்று மதத்தை தழுவியும் வாழும் பல ஊழியர்கள் இருப்பதையும் நாங்கள் அறிவோம். இது குறித்து பல குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன. ஆதலால், யாராவது இவர்கள் குறித்து துப்பு கொடுத்தால் கூட அவர்கள் வீட்டில் புகுந்து சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம். அப்போது மதம் சம்பந்தப்பட்ட புத்தகங்களோ, அடையாளங்களோ இருந்தாலோ அல்லது அக்கம் பக்கம் வீட்டார் கொடுக்கும் தகவல்கள் சரியாக இருந்தாலோ அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். இவ்வாறு பானுபிரகாஷ் தெரிவித்துள்ளார்.