புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஆசிரியர் தினமான இன்று, 45 ஆசிரியர்களுக்கு சேதிய ஆசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரவுபதி முர்மு, “இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் ஆசிரியர்களின் பங்களிப்பு மகத்தானது. ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன உபகரணங்கள் ஆகியவை வந்துவிட்டாலும், ஸ்மார்ட் ஆசிரியர்கள்தான் கல்வித் தரத்துக்கு முக்கிய காரணி.
மாணவர்களின் வளர்ச்சித் தேவைகளைப் புரிந்து கொள்பவர்கள்தான் புத்திசாலி ஆசிரியர்கள். பசம் மற்றும் உணர்வின் மூலமாக அவர்கள் கற்றலை சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகிறார்கள். இத்தகைய ஆசிரியர்கள், சமூகம் மற்றம் தேசத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திறன் கொண்ட நபர்களாக மாணவர்கள் வளர உதவுகிறார்கள்.
பெண் கல்வி நாட்டுக்கு மிக மிக முக்கியம். பெண் கல்வியில் முதலீடு செய்வது ஒட்டுமொத்த நாட்டையும் கட்டியெழுப்புவதற்கான விலைமதிப்பற்ற முதலீடு. பெண்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதுதான், பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான பயனுள்ள வழி.
பின் தங்கிய பின்னணியில் இருந்து வரும் பெண்களுக்கு சிறப்பு கல்வி ஆதரவை வழங்குவதில் தேசிய கல்விக் கொள்கை 2020 முக்கிய பங்கு வகிக்கிறது. கூச்ச சுபாவமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு சீர்திருத்தத்தின் தாக்கமும் இறுதியில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பில்தான் இருக்கிறது.
புதிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகலாளிய அறிவு வல்லரசாக நிலைநிறத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நமது ஆசிரியர்கள் உலகின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள், பள்ளிக் கல்வி, உயர் கல்வி, திறன் கல்வியில் தீவிர பங்களிப்பை வழங்க வேண்டும். இந்தியா உலகளாவிய அறிவு வல்லரசாக எழுச்சி பெறுவதில் நமது ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.” என தெரிவித்தார்.