மும்பை: மனித வெடிகுண்டுகளுடன் 34 வாகனங்கள் தயார் நிலையில் நகருக்குள் நுழைந்துள்ளதாகவும், மும்பையைத் தாக்கி அழிக்கப் போவதாகவும் மிரட்டல்கள் வந்துள்ளன. மகாராஷ்டிர மாநிலம் மும்பை மாநகர போலீஸ் உதவி மையத்துக்கு நேற்று காலை ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் 400 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்துகளை நிரப்பிய 34 வாகனங்கள் மும்பை நகருக்குள் நுழைந்து இருப்பதாகவும், அது வெடித்தால் மொத்த மும்பை நகரமும் அழிந்து விடும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும், மும்பை போக்குவரத்து போலீஸாரின் வாட்ஸ்அப் நம்பருக்கும் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது. மேலும், அந்த மிரட்டல் செய்தியில், லஷ்கர்-இ-ஜிஹாதி அமைப்பைச் சேர்ந்த 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்து இந்த தாக்குதலை நிகழ்த்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள மும்பை போலீஸார், மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். மேலும், இந்த மிரட்டல் குறித்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விநாயகர் ஊர்வலம்: மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமை தினத்தில் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்கும் நிகழ்வுகள் நடைபெறும். இந்த நாளை ஆனந்த் சதுர்த்தி என்ற பெயரில் மும்பை மக்கள் கொண்டாடுகின்றனர். வழக்கமாக விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்த 10 அல்லது 11-வது நாளில் மும்பை நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
இன்று ஆனந்த் சதுர்த்தி (செப்டம்பர் 6) நாளன்று இந்த மிரட்டல் செய்து வந்துள்ளதால் நகரில் உள்ள போலீஸார் அனைவரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.மும்பை நகரின் குற்றப்பிரிவு, தீவிரவாத எதிர்ப்புப் படை (ஏடிஎஸ்), இதர போலீஸார் பிரிவினர் அனைவரும் இணைந்து தற்போது பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளனர்.
ஒரு கோடி பேரை கொல்ல சதி: 400 கிலோ எடையுளள ஆர்டிஎக்ஸ் என்ற வெடிபொருட்களுடன் 34 வாகனங்கள் மும்பையில் நுழைந்துள்ளது என்ற தகவலால் நகர் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த 400 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் வாகனத்துடன் மோதினால் நகரில் ஒரு கோடி பேரை கொன்றுவிடுவோம் என்று அவர்கள் மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதுபோன்ற எந்தவிதமான மிரட்டலையும் எங்கள் போலீஸார் கையாள்வர். நகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கு இடமாகத் திரியும் நபர்கள், வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகிறோம். அனைத்து கோணங்களிலும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய கட்டிடங்களிலும் சோதனை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.