புதுடெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் 3-வது நாளாக இன்றும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 21-ம் தேதி தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளை கூட்டத் தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விட்டு இவற்றை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், மக்களவையில் சபாநாயகரும், மாநிலங்களவையில் அதன் தலைவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. கேள்வி நேரம் உட்பட அவையின் பிற அலுவல்கள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும், அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இதனால், நேற்று முன்தினமும், நேற்றும் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியபோதும், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர். மக்களவையில் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கொண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளிக்கு மத்தியில், சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி நேரத்தை தொடங்கினார். பிஹார் மாநில எம்பிக்கள், தங்கள் மாநிலத்துக்கான ரயில்வே திட்டங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார்.
எனினும், எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளி தொடர்ந்து நீடித்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் தலைமையில் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. அங்குள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் கேள்வி நேரத்தைத் தொடங்கிய ஹரிவன்ஷ், உறுப்பினர்களை கேள்விகளை முன்வைக்க எழுப்பினார்.
இலங்கை கடற்படையினரால் இந்திய மீனர்கள் கைது செய்யப்படுவது குறித்தும் அவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது குறித்தும் கேள்வி எழுப்பிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இவ்விஷயத்தில் மத்திய அரசு இலங்கை அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கச்சத் தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி தொடர்ந்ததால், அவையை 12 மணி வரை ஒத்திவைப்பதாக ஹரிவன்ஷ் அறிவித்தார். இதனால், மழைக்காலக் கூட்டத் தொடரின் 3-ம் நாளான இன்றும் இரு அவைகளும் தொடங்கியவுடன் முடங்கின.