புதுடெல்லி: வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளதை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான கவுரவ் கோகாய், “இந்த முறை பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கு உரையாற்றுவார் என்பதில் எங்களுக்கு முன்பை விட அதிக நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டத்தொடரில் மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்துக்கு வந்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்.
ஒன்று, பஹல்காம், துணைநிலை ஆளுநர் இது குறித்து கூறிய விஷயங்கள். நிறைய நேரம் கடந்துவிட்டது, அரசாங்கம் அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டும். இன்று அமெரிக்க அதிபரிடமிருந்து வரும் அறிக்கைகள், ஏதோ ஒரு வகையில், இந்தியாவின் கண்ணியத்தையும், இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அமெரிக்க அதிபருக்கான பதில்களை பிரதமரால் மட்டுமே வழங்க முடியும்.
இரண்டாவதாக, வாக்களிக்கும் உரிமை குறித்து இன்று முக்கியமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அரசியல் கட்சிகளுடன் பேசுவதை தேர்தல் ஆணையம் தவிர்க்கிறது. அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கேள்விகளுக்கு அது விளக்கம் அளிப்பதில்லை. சில மாநிலங்களுக்கு விரைவில் தேரதல் வர இருக்கிறது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் சார்ந்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, அரசாங்கத்தின் தலைவராக இருப்பதால், தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் அவையில் முன்வைப்பது அவரது கடமையாகும்.
மூன்றாவது விஷயம் என்னவென்றால், நமது மூத்த ராணுவ அதிகாரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையை எழுப்பியுள்ளனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடனான நமது எல்லையில் உருவாகியுள்ள புதிய நிலை பற்றியது அது. எனவே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி நாம் பேசுவது மிகவும் முக்கியம். எனவே, பிரதமர் மோடி அவைக்கு வந்து இந்த மூன்று விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைப்பது மிகவும் முக்கியம்.
அரசாங்கம் மணிப்பூர் தொடர்பாக பல்வேறு மசோதாக்களை கொண்டு வர இருக்கிறது. மணிப்பூரில் சில மாதங்களில் அமைதி திரும்பும் என்று பிரதமர் கூறியிருந்தார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டன. அமைதியான சூழ்நிலையை நம்மால் காண முடியவில்லை. சிறிய நாடுகளுக்குக்கூட பிரதமர் செல்கிறார். ஆனால், நமது நாட்டின் ஒரு சிறிய மாநிலத்தில், இன்னும் தீ எரிந்து கொண்டிருக்கும் நிலையில், அவர் ஏதோ காரணத்திற்காக அதைத் தவிர்த்து வருகிறார். வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரல் நேர்மறையான விவாதம் நடைபெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்தார்.