புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது இந்தியாவில் விசாரணை வளையத்தின் கீழ் உள்ளார். இந்நிலையில், 26/11 தாக்குதலை மேற்பார்வையிடும் வகையில் அவர் மும்பையில் இருந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது டெல்லியில் திஹார் சிறையில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) கண்காணிப்பில் அவர் உள்ளார். அவரிடம் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தானும், தனது நண்பர் டேவிட் ஹெட்லிக்கும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் பல கட்ட பயிற்சிகளை கொடுத்ததாக ராணா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், லஷ்கர்-இ-தொய்பா உளவு அமைப்பு போல செயல்படும் என்றும், மும்பையில் இமிகிரேஷன் மையத்தை திறக்கும் யோசனை தன்னுடையது என்றும், 26/11 தாக்குதலை மேற்பார்வையிடும் வகையில் மும்பையில் இருந்ததாகவும், தாக்குதல் நடந்த இடங்களை ஆய்வு செய்ததாகவும் அவர் விசாரணையில் கூறியுள்ளாராம்.
64 வயதான தஹாவூர் ராணா, கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார். அவரிடம் என்ஐஏ உட்பட விசாரணை அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.