புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையேயான கூட்டாண்மை உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுவதாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பரஸ்பர வரிவிதிப்பு கொள்கையை கடைப்பிடிக்கப் போவதாகக் கூறி இந்தியப் பொருட்களுக்கு எதிராக கூடுதலாக 25% இறக்குமதி வரி விதித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி மேலும் 25% கூடுதல் வரியை விதித்தார். இதன்மூலம், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் மொத்தம் 50 சதவீத கூடுதல் வரியை இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்தியப் பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறி இருந்தார்.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் இஷிபாவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கில் சீனா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்தன.
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடினைச் சந்தித்துப் பேசினார். இந்தியா – ரஷ்யா உறவு எப்போதும் வலிமையாக இருந்து வருவதாகவும் கடினமான காலங்களில் தோளோடு தோள் கொடுக்கும் நாடுகளாக இரண்டும் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
எஸ்சிஓ உச்சி மாநாட்டில் நிகழ்ந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு மற்றும் அவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள நெருக்கம், அமெரிக்காவுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியா உடனான தனது நட்புறவை, அமெரிக்கா கெடுத்துக்கொண்டதன் விளைவு எஸ்சிஓ உச்சி மாநாட்டில் அப்பட்டமாக வெளிப்பட்டதாக பலரும் கருதுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதவில், அமெரிக்கா – இந்தியா உறவு புதிய உச்சங்களை எட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அந்த பதிவில், “21ம் நூற்றாண்டை வரையறுக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது. எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும் மக்கள், முன்னேற்றம் மற்றும் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை நாங்கள் இந்த மாதம் வெளிச்சம்போட்டு காட்டுகிறோம்.
புதுமை, தொழில்நுட்பம் முதல் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் வரை நமது இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான நீடித்த நட்புதான் இந்த பயணத்தைத் தூண்டுகிறது. #USIndiaFWDforOurPeople எனும் ஹேஷ்டேக்கை பின்தொடருங்கள், அதன் ஒரு பகுதியாக இருங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பதிவில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவின் பதிவும் இடம்பெற்றுள்ளது. அவர் தனது பதிவில், “நமது இரு நாடுகளின் மக்களுக்கும் இடையே இருக்கும் நீடித்த நட்புதான், நமது ஒத்துழைப்பின் அடித்தளமாகும். அதுதான், நமது பொருளாதார உறவின் மகத்தான ஆற்றலை நாம் உணரும்போது நம்மை முன்னோக்கிச் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.