புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக பெங்களூருவில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். கொண்டாட்ட நிகழ்வொன்று கொடும் துயரமாக மாறிப்போனது துரதிருஷ்டவசமானது. இந்த நிலையில், 2008 முதல் 20225 வரை இந்தியாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் துயரங்கள் சிலவற்றின் பட்டியல் இது.
> மே 3, 2025: கோவாவின் ஷிர்காவ் கிராமத்தில் உள்ள ஸ்ரீலைராய் தேவி கோயிலின் வருடாந்திர விழாவின்போது அதிகாலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்; சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
> ஜன.29, 2025: உத்தரப் பிரதேசத்தில் நடந்த மகா கும்பமேளாவில், மவுனி அம்மாவசையன்று திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர். எனினும், இந்த அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கு மாறாக உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியிருந்தனர்.
> ஜன.8, 2025: திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் நடைபெறும் வைகுண்ட திவார தரிசனத்தைப் பார்ப்பதற்கான டிக்கெட்கள் வாங்குவதற்காக பலர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
> டிச.4, 2024: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த புஷ்பா-2 திரையிடலுக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக முண்டியத்த கூட்டத்தில் சிக்கி 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.
> ஜூலை 2, 2024: உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் போலே பாபா என்ற சாமியார் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகள் பெண்கள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.
> மார்ச் 31, 2023: இந்தூரில் உள்ள கோயில் ஒன்றில் ராமநவமி அன்று நடந்த விழாவின்போது, அங்கிருந்த பழங்கால கிணறு ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
> ஜன.1, 2022: ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
> செப்.29, 2017: மும்பையின் மேற்கு ரயில்வேயின் எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தையும், மத்திய ரயில்வேயின் பரேல் நிலையத்தையும் இணைக்கும் பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.
> ஜூலை 14, 2015: ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் நடந்த புஷ்கர விழாவின் தொடக்க நாளில், கோதாவரி நதிக்கரையில் உள்ள மிகப் பெரிய குளிக்கும் இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
> அக்.3, 2014: பிஹாரின் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் தசரா கொண்டாட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
> அக்.13, 2013: மத்தியப்பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோயிலுக்கு அருகே நடந்த நவராத்திரி திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பக்தர்கள் கடந்த செல்லவிருக்கும் பாலம் இடிந்து விழப்போகிறது என்ற வதந்தியால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
> நவ.19, 2012: பாட்னாவின் கங்கை நதிக்கரையில் உள்ள அதாலட் காட்-ல் நடந்த சாத் பூஜையின் போது, கூட்ட நெரிசலால் தற்காலிக பாலம் இடிந்து விழுந்தது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
> நவ.8, 2011: ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்-கி-பவுரி காட்-ல் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 20 பேர் உயிரிழந்தனர்.
> ஜன.14, 2011: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் புல்மேடு பகுதியில் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 104 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.
> மார்ச் 4, 2010: உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கிருபாலு மகாராஜ் ராமர் ஜானகி கோயில் சாமியார் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த இலவச உணவு மற்றும் உடை வழங்கும் விழாவில் உண்டான கூட்ட நெரிசலால் 63 பேர் கொல்லப்பட்டனர்.
> செப்.30, 2008: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வெடித்தகாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 250 பக்தர்கள் உயிரிழந்தனர்.
> ஆக.3, 2008: இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறை சரிவு ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 162 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.