மும்பை: 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. போதுமான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் கட்டாய ஒப்புதல் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
2006-ம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பில் 189 பேர் கொல்லப்பட்டு, 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) விடுவித்தது.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் அடங்கிய சிறப்பு அமர்வு, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதில் இருந்த கடுமையான குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. “அடையாள அணிவகுப்பு குறித்து கடுமையான கேள்விகளை எதிர்தரப்பினர் எழுப்பினர். பல சாட்சிகள் வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலம், சிலர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருந்தனர். பின்னர் திடீரென குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண்பித்தனர், இது அசாதாரணமானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென குற்றம் சாட்டப்பட்டவரை எவ்வாறு நினைவு கூர்ந்து அடையாளம் காண முடிந்தது என்பதை விளக்க பலர் தவறிவிட்டனர்.” என்று சிறப்பு அமர்வு குறிப்பிட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பின் தோல்வியை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், “குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் அளித்திருக்கும் சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. இந்த வழக்கில் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது.” எனத் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில், கமல் அன்சாரி என்பவர் 2021 இல் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த மீதமுள்ள 11 பேர் இப்போது விடுதலை செய்யப்பட உள்ளனர். இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிலரின் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் யுக் மோஹித் சவுத்ரி இந்த தீர்ப்பு குறித்து பேசுகையில், “இந்தத் தீர்ப்பு தவறாக சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும்.” என்று கூறினார்.