இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் துகோகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி சிப்லங்கர் (80). இவர் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவரை 2 நாட்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்து ரூ.1.02 கோடியை மோசடி கும்பல் பறித்துள்ளது. இதுகுறித்து இந்தூர் குற்றப் பிரிவு டிசிபி ராஜேஷ் தண்டோதியா நேற்று கூறியதாவது:
கடந்த மே 27-ம் தேதி மர்ம நபர்கள் சிலர் நந்தினி சிப்லங்கரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது மும்பை கொலாபா போலீஸ் என்றும் சிபிஐ அதிகாரிகள் என்றும் தங்களை அறிமுகப்படுத்தி கொண்டுள்ளனர். மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுடன் நந்தினி பணப் பரிவர்த்தனை வைத்துள்ளதாகவும், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாகவும் மர்ம நபர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக நந்தினி மீது 267 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மிரட்டி அவரை 2 நாட்கள் டிஜிட்டல் அரஸ்ட் செய்து ரூ.1.2 கோடியை பறித்துள்ளனர். தொடர்ந்து அந்த கும்பல் மிரட்டிய நிலையில், வங்கிக்கு சென்று தனது வைப்பு நிதி ரூ.50 லட்சத்தை நந்தினி எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், சந்தேகம் அடைந்த வங்கி மேலாளர் உடனடியாக போலீஸுக்கு தகவல் அளித்தார். உடனடியாக போலீஸார் நந்தினியை சந்தித்து மோசடி கும்பல் குறித்து நந்தினிக்கு புரிய வைத்தனர். அதனால் அவருடைய வைப்பு நிதி ரூ.50 லட்சம் பறிபோவது தடுக்கப்பட்டது. இவ்வாறு டிசிபி ராஜேஷ் கூறினார்.