அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 787-8 ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்நிலையில், 1988-ல் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தை நினைவுப்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
கடந்த 1988-ல் விபத்தில் சிக்கியது இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம். 1988 அக்டோபர் 19-ம் தேதி அன்று மும்பையில் இருந்து அகமதாபாத்துக்கு வந்த அந்த விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 133 பேர் உயிரிழந்தனர். இது தேசத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்று.
மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அந்த விமானம் மரங்கள் மற்றும் மின்சாரம் கோபுரங்களில் மோதிய பின்னர், சிலோடா கோடார்பூர் கிராமத்துக்கு அருகில் உள்ள விலை நிலத்தில் விழுந்தது. அந்த விபத்து ஏற்பட்ட இடம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சுமார் 2.54 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. அந்த விமானத்தில் 129 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் பயணித்தனர். இதில் விமான பணியாளர்கள் அனைவரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 5 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதில் 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.
இன்று நடந்தது என்ன? – விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.