புதுடெல்லி: 1965-ம் நடந்த போரில் 45 விமானங்களையும், 1971-ல் நடந்த போரில் 71 விமானங்களையும் நாம் இழந்தோம் என்று மக்களவையில் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே பேசினார். மக்களவையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது பாஜக எம்பி நிஷிகாந்த் துபே இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நாடாளுமன்றத்தில் செயல்பட்டு வரும் மொழிபெயர்ப்பு அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பேச்சு தடைபட்டது. அதாவது அவர் இந்தியில் பேசுவதை மொழிபெயர்த்து எம்.பி.க்களின் ஹெட்போன் வழியே ஒலிபரப்பும் கருவி பழுதடைந்தது.
இதைத் தொடர்ந்து, திமுக எம்.பி.க்கள் அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்று கூறி ஆங்கிலத்தில் பேசுவதற்கு நிஷிகாந்த் துபே மறுத்துவிட்டார். மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, “நீங்கள் என்னை தமிழ் அல்லது வங்க மொழியில் பேசச் சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறுகிறீர்கள். ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, நீங்கள் அதை வலியுறுத்துவது உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறது. மக்களவையில் ஒருவர் அரை மணி நேரம் வங்க மொழியில் பேசினார். அதற்கு அப்போது தமிழக எம்.பி.க்கள் சிறிது கூட ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு இந்தியில்தான் பிரச்சினை.
காங்கிரஸுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வட இந்தியர்களோ அல்லது இந்தியோ பிடிக்காது. நீங்கள் ஆங்கிலத்தை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால், நாம் இங்கிலாந்துவாசிகளாக மாறிவிடுவோம். நாம் மீண்டும் அடிமைகளாக மாறும் நிலை வந்துவிடும்’’ என்றார்.
இதையடுத்து மக்களவையில் மொழிபெயர்ப்புக் கருவியில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நிஷிகாந்த் துபே பேசி முடித்தார். அவர் தொடர்ந்து பேசும்போது, “1965-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா 45 விமானங்களையும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்களையும் நமது ராணுவம் இழந்தது. ஆனால், நாங்கள் தேசியவாதிகள் என்பதால் இந்த விஷயத்தை ஒருபோதும் ஒரு பிரச்சினையாக மாற்றவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தின் இழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருகின்றன’’ என்றார்.