பிரேசிலியா: பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள அந்நாட்டு அதிபரின் அதிகாரபூர்வ வசிப்பிடமான அல்வோரடா மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு நல்கப்பட்டது. 144 குதிரைகள் அணிவகுக்க, இந்திய இசையுடன் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூடவே பிரேசிலின் பாரம்பரிய நடனமான சம்பா நடனத்தையும் அந்நாட்டுக் கலைஞர்கள் ஆடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கடந்த 6, 7-ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
முன்னதாக, ரியோ டி ஜெனிரோவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு சென்றார். அங்கு விமான நிலையத்தில் பிரேசில் பெண் கலைஞர்கள் ட்ரம்ஸ் இசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவரை வாழ்த்தி வரவேற்றனர்.
அதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரேசிலியாவில் இந்திய சமூகத்தினரின் வரவேற்பு மறக்க முடியாத அனுபவம். எங்கு வாழ்ந்தாலும் இந்திய கலாச்சாரத்தோடு அவர்கள் ஒன்றிணைந்து உள்ளனர். பிரேசிலியா விமான நிலையத்தில் படாலோ முண்டோ குழுவினரின் ஆப்பிரிக்க- பிரேசில் இசை மிகவும் அற்புதமாக இருந்தது. குறிப்பாக சம்பா நடனம் சார்ந்த இசை சிறப்பாக இருந்தது” என்று பதிவிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
தொடர்ந்து, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம் தொடர்பாக பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசிலில் இருந்து நமீபியாவுக்கு சென்றார். அப்போது அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Highlights from the programmes in Brasilia.
May India-Brazil friendship keep getting stronger and stronger! pic.twitter.com/NL1WAwAhW8
— Narendra Modi (@narendramodi) July 9, 2025